வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உலகம் பேணுவோம் -2

0 comments

புவி வெப்பமடைதல் (Green House), கரியமில தடம் (Carbon Footprint) என்று ஏதேதோ சொல்லி உலகம் அழிவை நோக்கும் ஆபத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்திகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நாம் செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் ஒழுங்குமரியாதையாகக் கடைப்பிடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அழிவை தடுக்க இனி இயலாது என்றாலும் கொஞ்சம் தாமதப்படுத்தப் பல வழிகள் உள்ளன. உதாரணமாக அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு அதிகமான Paperwork இருக்கும். அதன் பெயர் அப்படி உள்ளது என்பதற்காக எடுத்த எடுப்புக்கெல்லாம் தாட்களை விரையப்படுத்தும் வகையில் அச்சு செய்து கொண்டே இருக்கலாமா? இப்போது Paperless முறை வந்துவிட்டாலும் அதிகமானோர் ஒரு பாரத்தையோ அறிக்கையையோ சரிபார்க்க முதலில் அச்சுப்படிவம் செய்வதையே விரும்புகின்றனர். சரி செய்தபின்னர் அதை தூர எறிந்துவிட்டு வேறு அச்சுப்படிவம் செய்வர். இப்படி சின்னத்தாளிலிருந்து (உபயம்: காட்டு மரங்கள்) வானளாவி வரை எதைத் தொட்டாலும் அது விளைவிக்கும் புவிக்கான பாதிப்புகள் நிச்சயம் உண்டு.


சம்சாரம் அது மின்சாரம் என்பார்கள். சம்சாரத்தைத் தொடுவதைப் போல மின்சாரத்தைத் தொட்டால் அது கொஞ்சாது. மிஞ்சிவிடும். சம்சாரமும் சில நேரங்களில் மிஞ்சத்தானே செய்கிறாள். இந்த மின்சாரத்தையும் கட்டுப்பாடுடன் பயன்படுத்துவதால் புவிப்பந்தைச் சற்று காக்க முடியும். அதற்கான சில வழிகளை இந்த இடுகையில் காண்போம்.


கைப்பேசி இல்லாத ஆளே இல்லை எனலாம். அப்படி கையோடு ஆறாவது விரலாக ஒட்டிக்கொண்டிருக்கும் கைப்பேசியின் மின்கலத்தைத் திறனேற்றியப் பிறகு (Charge) அதன் மின்னூட்டியை (Charger) அப்படியே விட்டுவிடுவது அதிகமானோரின் பழக்கமாக இருக்கிறது. என்னதான் நாம் மின்சார விசையை அடைத்திருந்தாலும் அதில் சொருகப்பட்டிருக்கும் மின்னூட்டியில் மின்சத்தி குறைந்த அளவில் பயனீடாகிக்கொண்டுதான் இருக்கும். எனவே, பயன்படாத வேளையில் மின்னூட்டியைக் கழற்றிவிடுவதே நல்லது. இது மடிக்கணினி, படக்கருவி போன்றவற்றின்
 மின்னூட்டிக்கும் பொருந்தும்.

மேலும், மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி உங்களது மின்கருவிகளின் மின்கலத்தைத் திறனேற்ற சூரிய சத்தியைக் கொண்டு செயலாற்றும் மின்னூட்டிகளையும்  (மேலே) பயன்படுத்தலாம். இந்த வகை மின்னூட்டிகள் சாவிக்கொத்து போன்ற வடிவத்திலும் கிடைக்கும். ஆனால், அதிக நேரமெடுக்கும். கைகளால் திருகி சத்தி உருவாக்கும் மின்னூட்டிகளும் உள்ளன. இவை மின்சார வசதி கிடைக்காத வேளையில் மிகவும் துணைபுரியும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக இப்போது வெளிவரும் பெரும்பாலான மின்சாதனங்கள் மின்சத்தியை மிச்சப்படுத்துபவையாகவே உள்ளன. உதாரணமாக Panasonic Inverter எனும் வகையைச் சேர்ந்த குளிர்சாதனப்பெட்டி உள்ளிருக்கும் பொருள்களின் எண்ணிக்கையை அறிந்து சுயமாகவே மின்சத்தியை கட்டுப்படுத்தும். இது போலவே அறையின் சதுர அளவையும் உள்ளிருக்கும் ஆட்களின் எண்ணிக்கையையும் உணர்ந்து மின்சத்தியைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டி சாதனங்களும் உள்ளன. Energy Star எனும் திட்டம் அமெரிக்க அரசால் 1992இல் துவங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது மின்சத்தியை மிச்சப்படுத்தும் உத்திகளைக் கண்டறிந்து அந்நாட்டினருக்குக் கொண்டுச்செல்வதாகும். இத்திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகக் குறைந்த மின்சத்தியில் செயல்படும் சாதனங்களை அங்கீகரித்து அவற்றைப் பற்றிய நன்மைகளையும் பயன்களையும் பரப்புகின்றனர். இத்திட்டமானது இன்று அனைத்துலக நிலையில் செயல்பட்டு வருகின்றது. இதன் சின்னத்தைப் பொறிக்கப்பட்டு வெளிவரும் மின்சாதனங்கள் அதிக அளவில் மின்சத்தியை மிச்சப்படுத்தக்கூடியவையாகும்.எனவே இச்சின்னம் உள்ள மின்சாதனங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.இன்னொரு மின்சாதனமும் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவைகளில் ஒன்றாகியுள்ளது. அது கணினியாகும். முந்தைய நாட்களில் கணினி வாங்குவதும் அதனை செம்மையாகப் பயன்படுத்துவதும் நான் வாய் பிளந்த விடயங்களிலொன்றாகும். ஆனால் இன்று கணினியின் பயன்பாடு எந்தளவுக்குள்ளது என்பது தெரிந்ததே. அப்படி புதிய கணினிகள் வாங்கும்போது பெரும்பாலானவை இயற்கைக்கு அதிக கேடு விளைவிக்காத விதத்தில்தான் வருகின்றன. உதாரணமாக (மடிக்கணினி) மின்கல பயன்பாட்டின்போது சத்தியை மிச்சப்படுத்தும்படியான செயல்முறைக்குத் தானாகவே மாறிக்கொள்ளும். முன்பிருந்த கணினிகள் அதிக சத்தியில் செயல்படுபவையாக இருந்தன. இப்போதையவை அப்படியல்ல. ஆனால் இக்கூற்று கைப்பேசிகளுக்குப் பொருந்தாது. முன்பிருந்த கைப்பேசியைவிட இன்றைய கைப்பேசிகள், அதுவும் Smart Phone போன்றவை சீக்கிரம் திறன் இழந்து மீண்டும் மின்னூட்ட கோருபவை. எனவே, கைப்பேசி விவகாரத்தில் அதிக செயலாற்றுகள் இல்லாதவையே சிறந்தவை.


இதில் இன்னொன்று அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையைக் காப்பதாக எண்ணி Eco Friendly மற்றும் Energy Efficient போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு புதிய மின்சாதனங்களை வாங்குவது போற்றதற்குரியதே. என்றாலும் ஏற்கனவே உபயோகத்திலிருந்த, திக்கித்திணறியாவது செயல்படக்கூடிய மின்சாதனங்களை வீசுவது கேட்டையே விளைவிக்கும். காரணம் அக்கருவிகளிலுள்ள உபரிப்பாகங்கள் சுயமாக அழியக்கூடியவையல்ல. எனவே அவற்றை வசதியற்றவருக்கு தானமாகக் கொடுத்து விடலாம். அப்படி செயலிழந்தவையெனில் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பிவிடலாம்.


மேற்கூறப்பட்டவைத்தவிர மின்சாரத்தை மிச்சப்படுத்தி உலகை காக்க யாருக்கும் தெரியாத சில உத்திகளும் உள்ளன. கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். அவற்றுள் சில உங்களுக்காகச் சொல்கிறேன். ஆளில்லாத அறையில் விளக்கு, மின்விசிறி, வளிச்சீராக்கியை (air conditioner) அடைக்கவும்; கொஞ்சமான துணிகளைச் சலவை இயந்திரத்தில் துவைக்காதீர்; படுத்துகொண்டு தொலைக்காட்சி பார்க்கையில் குறித்த காலமுடுக்கியை (timer) இயக்கிவிடுங்கள்; ஒரு வாரத்திற்கான ஆடைகளை ஒரே நேரத்தில் இஸ்திரி செய்துவிடுங்கள்; அலுவலகக் கணினிகளைப் பயன்படுத்தாத வேளையில் உறங்கச்செய்துவிட்டு (sleep mode) செல்லுங்கள்; இதுவும் தெரியாத பச்ச புள்ளைங்க இங்கே போங்க..

சனி, 21 ஆகஸ்ட், 2010

கோபே-இவாயா

2 comments


உலகத்திலேயே அதிகமானோர் தற்கொலை செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் பாலமான கோல்டன் கேட் பாலமானது கட்டி துவங்கப்பட்ட காலத்தில் (1937)உலகிலேயே நீளமான SUSPENSION வகை பாலமாக விளங்கியது. அதன் பின்னர் அவ்வகையைச் சார்ந்து அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இன்று உலகிலேயே நீளமான SUSPENSION பாலமாக ஜப்பானிலுள்ள அகாஷி கேய்க்யோ பாலம் விளங்குகிறது. இப்பாலத்தைச் செல்லமாக முத்துப் பாலம் (PEARL BRIDGE) என்றும் அழைப்பர். 1998இல் துவங்கப்பட்ட இப்பாலம் கோபே நகரிலிருந்து அகாஷி நீரிணையைக் கடந்து அவாஜி தீவிலுள்ள இவாயா நகரை இணைக்கின்றது.(புரிஞ்ச மாதிரி இருக்குதா?)


ஆரம்பகாலத்தில் இவ்விரு நிலங்களையும் இணைக்க படகு (ferry) சேவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்நீரிணைப் பகுதி அடிக்கடி கடும் புயல்காற்று பயணிக்கும் வழியில் அமைந்துள்ளதால் 11 மே 1955 இல் இரு பயணப்படகுகள் மோதி மூழ்கும் நிலைக்காயின. அதில் பலியான 168 பேரில் நூறுக்கும் மேலானோர் பள்ளி மாணவர்களாவர். இச்சம்பவம் அகாஷி பாலம் அமைவதற்கு முக்கியக் காரணமாகும்.298மீட்டர் உயரமுடைய இரு கோபுரங்களின் மத்தியில் அமையப்பெற்றிருக்கும் மத்தியத்தளம் (span) 1991 மீட்டர் நீளமுடையது. கிட்டதட்ட 2 கிலோமீட்டர் நீளமுடைய இந்த தளத்தின் கீழ் எந்தவொரு தூண்களும் கிடையாது. பலத்த கடலலைகள், 8.5 ரிட்சர் ஸ்கேல் வரையிலான நிலநடுக்கம், மணிக்கு 286 கிலோமீட்டர் வரை வீசும் பலத்த காற்று அனைத்தையும் தாங்கி சற்றும் அசராமல் நிற்கக்கூடிய வலிமையுடன் இப்பாலத்தை வடிவமைத்துள்ளனர். அதிகமான இயற்கை பேரிடர்களைச் சந்திக்கும் ஜப்பான் நாட்டினர்தான் இப்படி சவாலுக்குரிய கட்டடங்களைத் துணிவோடு நிர்மாணிக்கிறார்கள். 3911 மீட்டர் மொத்த நீளமுடைய இப்பாலம் வெப்பத்தால் மேலும் இரண்டு மீட்டர் வரை விரியவும் சுருங்கவும் செய்யும். ஆரம்பத்திட்டத்தில் தொடர்வண்டித் தண்டவாளங்களையும் இணைக்க எண்ணி சரிவராமல் அதன்பின்னர் 6 வழிப்பாதைகளைக் கொண்டுள்ள இப்பாலம் 10 ஆண்டுகள் உழைப்பின் பலனாக 5 ஏப்ரல் 1998 இல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சட்டுபுட்டுனு

0 comments
நேரம் கிடைப்பது கடுமையாகிவிட்டதால் பல செய்திகளைச் சில துணுக்காக இடவேண்டியதாயிற்று. ஆராய்கையில் அதிகமான உண்மைகளைக் கண்டறிய இயல்கிறது. அதில் ஊறுகாய்போல தொட்டுக்கொள்ள சில..
படத்தில் சிரிப்பவருக்கும் இந்த இடுகைக்கும் எந்தவொருத் தொடர்புமில்லை. பக்கத்தில் தொங்குபவர்தான் சங்கதிக்குரியவர். இது உலகக்கிண்ணக் கனவாய் இல்லை. இதன் பெயர் HUMBOLDT SQUID @ Jumbo Squid. வாஷிங்டன், கலிஃபோர்னியா போன்ற இடங்களிலுள்ள கடல்களில் அதிகமாக வாழும் இவை மனித உயரத்துக்கு (80 இறாத்தல் எடை வரை)வளரக்கூடியவை. இக்கனவாய் எதிரிகளிடமிருந்து தற்காத்துகொள்ள மின்னல்வேகத்தில் விரையக்கூடியதோடு உடனடியாக உடல் வண்ணத்தைச் சிவப்பிலிருந்து பிங்க் வண்ணத்துக்கும், மெரூண் வண்ணத்துக்கும் மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவை. இது தனது வால்பகுதியை ஊன்றி கடல்மட்டத்திலிருந்து மேலெழும்புவது பறப்பதுபோல தோற்றமளிக்கும்.
மேலுள்ளது கல்லோ மலையோ அல்ல. இது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடலாமையின் ஓடு. பஹாமாசில் உள்ள அபாகோ நீர்க்குகையில் சில முதலைகளின் எலும்புக்கூட்டோடு இதுவும் கிடைத்துள்ளது. அங்கு நடந்துகொண்டிருக்கும் ஆய்வில் மேலும் பல விந்தையான கடல் உயிரினங்களும் நுண்ணுயிர்களும் கண்டறியப்பட்டுள்ளன. நீர்மட்டத்திலிருந்து 60 அடி ஆழத்தில் பிராணவாயுவே இல்லாத குகையில் மேலும் அதிகமான ஆதிகால உயிர்களின் தடயங்கள் கிட்டுமென நம்பப்படுகிறது. அவ்வட்டாரத்தில் நூறுக்கும் மேற்ப்பட்ட நீர்க்குகைகள் இருந்தாலும் ஒருசிலவற்றில் மட்டுமே நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அது தொடர்பான சில படங்கள் கீழே..


புதன், 18 ஆகஸ்ட், 2010

ஆறுவது சினம்

1 comments

ரொம்ப நாளா எழுதாம ஆறி போச்சு என் வலைப்பதிவு. அதை கொஞ்சம் குளிப்பாட்டி, தலை சீவி, சடை பின்னி, உட்கார வச்சு புலம்பறதுக்கு இப்பதான் காலம் கனிந்தது. ஆத்திரத்தால எதையும் சாதிக்கமுடியாது என்று எல்லா மாணவர்களுக்கும் பாடம் கற்பிக்கிறேன்; அடுத்த மனிதன் மேல அன்பு பாரட்டனும் என்றும் போகிற இடமெல்லாம் சொல்கிறேன். போய் சேர்ந்த என் அம்மா அப்பா வயசுல எந்தவொரு பழுத்த பழம் சாலையோரம் நொந்துகிடந்தாலும் என் கண் கலங்கி போகிறது. அப்படிபட்ட நல்ல மனதும் மனிதநேயமும் எனக்குள் இருப்பதாக நானே நினைத்துகொள்கிறேன். ஆனால் நான் அவன் இல்லை என்றும் பல நேரங்களில் சங்கடப்படத் தோன்றுகிறது. எனவே நான் நல்லவனா கெட்டவனா என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை மிருகம் பாதி கடவுள் பாதி (சொல்லவரும்போதே மிருகம்தான் தவறுதலாக முன் வருகிறது) என்று இருக்குமென மனம் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் மிருகம்தான் முக்கால்வாசி இருக்கும் என்று அசரீரி சொல்கிறது. சரி நான் எப்படியோ இருந்துட்டு போகிறேன், ஆனால், நூறு பேருக்குப் பாடம் சொல்லிக்கொடுக்குற நான் அப்படி இருக்கலாமா?

-அப்படி என்னதான்டா பண்ணே??-

ஒன்றும் இல்லை, எல்லாம் இந்தப் பாழாய் போன கோபம்தான். இதுவரை அந்த உலக மகா மட்டமான உணர்ச்சி ஏற்படும்போது நானெடுத்த எந்த முடிவும் சரியாக இல்லை. கையிலுள்ளது உடையும், பறக்கும் அல்லது கிழியும். மனோவியல் பற்றி படித்தபோது அச்செயல்கள் கோப உணர்ச்சியிலிருந்து வெளியேறிவர உதவுமென ஆசான் சொன்னார். பழையக் காகிதங்கள், பழையப் பொருட்கள் அல்லது போகிக்கு எடுத்துவைத்த பொருள் மீது அவ்வுணர்ச்சியைக் காட்டினால் ஏற்றுக்கொள்ளலாம். நான் உடைத்ததும் கிழித்ததும் பறக்கச்செய்ததும் நல்ல நிலையில் இருந்தவை; என் செயலுக்கு பின் நொந்தநிலையில் இருப்பவை.

 இப்படி என் கோபத்தின் பலனை  இங்கே போட்டுடைத்து என்னை நானே கேவலப்படுத்திக்கொள்வது என் நோக்கமல்ல. ஆனால் என் கோபம் எதையெல்லாம் சாதித்துள்ளது என்று எடைபோட்டுப் பார்க்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் இந்த இடுகையைத் தூண்டிவிட்டதே. எனக்கு சிலரிடம் மட்டும் பல காரணங்களால் கோபம் கொந்தளிக்கும். ஆனால் அதை வெளிப்படுத்தி உரியவரிடம் கடிந்துகொள்ளும் அளவுக்கு எனது நிலை இல்லை. ஆனால் அவ்வுணர்ச்சி அடங்கிப்போகாது.  அன்று ஒரு நிகழ்வின் தாக்கத்தால் கோபம் மட்டுமே என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. எனக்குள் எவனோ ஒருவன் (நான்தான் வேற யாரு) புகுந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல், உயிரையும் மதிக்காமல் மோட்டார் சைக்கிளில் பறக்கிறான் வீட்டை நோக்கி. வீட்டில் இருக்கும் முதலாளி அம்மா என்னைக் கைப்பேசியில் அழைக்கிறாள். நானும் பதிலளிக்கிறேன். அவளின் குரலைக் கேட்கும்போது எனது கோபம் தணிகிறது. வண்டியின் வேகமும் லேசாகக் குறைகிறது. இருந்தாலும் மனதில் இருந்த நெருடல் இன்னும் மங்கவில்லை.

அப்போது பின்னால் வரும் மகிழுந்துவொன்று என்னை முந்திச்செல்ல எத்தனிக்கிறது. இரண்டு சக்கர ஊர்தியில் செல்லும் நானோ சாலையையே வளைத்துப் போட்டுகொண்டு மத்தியில் செல்கிறேன். அவ்வண்டிக்காரன் ஹார்ன் அழுத்துகிறான்.பிறகு முந்துகிறான். நானோ அங்கெல்லாம் பாதையே இல்லாத மாதிரிதான் நடிப்பானுங்க என்று எங்கோவுள்ள கோபத்தை அவனிடம் காட்டி, முனகிக்கொண்டே முறைக்கிறேன். வண்டி முந்துகிறது. வண்டியிலுள்ள மூன்று மலாய்க்கார இளைஞர்களும் என்னைப் பார்க்கின்றனர். முந்திவிட்டனர். பிறகு அவ்வண்டியின் வேகம் குறைகிறது. வெட்டிட்டா போகவேண்டிதானே, லூசு மாதிரி slow பண்றானுங்க பாரு, அடுத்த முனகல். மெதுவாகப் போய்க்கொண்டிருக்கும் அந்த வண்டியிலிருந்து ஒருவன் எட்டிப்பார்த்து என்னிடம் ஏதோ கைச்சாடை காட்டுகிறான். பிறகு அந்த வண்டி பறந்துவிட்டது. என்னவாக இருக்குமென்று நானும் திரும்பித்திரும்பி ஊர்தியைப் பார்க்கிறேன். எல்லாம் சரியாக இருந்தது. ஒருவேளை நாம் முறைத்ததால் நம்மை குழப்பிவிட அப்படி செய்தார்களோ என்று என் மரமண்டை சொன்னது. ஊர்தியை நிறுத்திவிட்டு குனிந்து நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது; எனது குளிராடையின் கைப்பகுதி இரும்புக்கூடையிலிருந்து கீழே தொங்கிக்கொண்டே, சாலை முகப்பை உரசிக்கொண்டே  வந்திருக்கிறது. கோபத்தில் நான் பறந்தபோது அதுவும் பறந்து அப்படி ஆகியிருந்தது. கவனிக்காமல் மேலும் சென்றிருந்தால் அது சக்கரத்தில் மாட்டிகொண்டு என்னையும் எங்காவது தொங்கச்செய்திருக்கும். அதை சுதாகரித்துகொண்டு நிமிரும் வேளையில் எனக்கு உதவியவர்கள் அங்கில்லை.

-இந்த சின்ன சம்பவத்துக்கா இவ்ளோ உணர்ச்சி பொங்குற?-

இது எனக்கு சின்ன சம்பவமாகத் தோன்றவில்லை. அந்த இளைஞர்கள் காலத்தினாற் செய்தி நன்றி எனக்கு மாணப் பெரிதுதான். அன்றிரவு முழுக்க அந்த சம்பவம் என்னை பிரட்டி போட்டுகொண்டு இருந்தது. சில நேரங்களில் நம் சொந்த உணர்வுக்காக, நம்மிடம் உள்ள குறைபாடுகளுக்காக நியாயமே இல்லாமல் பிறரிடம் கடிந்து கொள்வது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்று உணர்கிறேன். எங்கோ உள்ள கோபத்தை அறவே தொடர்பில்லாத ஒரு பொருளாகட்டும், உயிராகட்டும், அங்கு காட்டி என்ன பயன்? நான் ஞானியோ, சாமியாரோ இல்லை. ஆனால் ஆறறிவு பெற்றவொரு மனிதனாகவேயிருந்து சிந்தித்துப்பார்க்கிறேன். ஆத்திரத்தைப் பற்றி ஆத்திசூடி தொடங்கி அன்பே சிவம் படம் வரைக்கும் எல்லாரும் சொன்னது சத்தியமாக உண்மை. ஆத்திரப்படும்போது அறிவிழக்கிறோம். அதற்குபிறகு எதையெதையோ இழக்கிறோம். ஆத்திரமென்பது சாதாரண உணர்ச்சிதான். அது எல்லாருக்குமே வரக்கூடியதுதான். ஆனால் அதன் விளைவு சதா ரணமாகிவிடக்கூடாது. எனவே அந்த உணர்வைத் தவிர்க்க இயன்றவரை நான் முயல்கின்றேன். என்கூட நீங்களும் வாங்களேன்..
மரமண்டை

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காக்க காக்க

3 comments


பள்ளி பயின்ற காலத்தில் ஏதோவொரு போத்தலில் குடிநீர் கொண்டுச்செல்வேன். நண்பர்களில் பெரும்பாலான மாணவிகள் மட்டும் அழகழகான வரைபடங்கள் உள்ள நீர்ப்புட்டியைக் கொண்டுவருவர். அப்போது அது ஆபத்தைக் கொண்டுவருவனவா என்று எவரும் ஆராய்ந்ததில்லை. ஒருமுறை பாத்திரம் கழுவும் சவர்க்கார கலனில் (AXION) ஒரு மாணவனோ மாணவியோ உணவு எடுத்துவந்தபோது ஆசிரியர் அறிவுரை சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. NESCAFE போத்தலில் வேலைக்கு கறி எடுத்துபோன என் அப்பாவும் அம்மாவும் எந்த பாதிப்பையும் அடையவில்லை.


அதைப்பற்றி யோசிக்கக்கூட இல்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் ‘மினரல்’ தண்ணீர் போத்தலைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் உடல்நலத்துக்குக் கேடு என அறிந்து அதன் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்தேன்.


அப்போது அதற்குப் பதிலாக அந்த வேளையில் அதிகம் விளம்பரப்படுத்த, புகழாரம் சூட்டப்பட்ட பாலிகார்பனேட் (POLYCARBONATE) போத்தலை எனக்கொன்றும் துணைவிக்கொன்றும் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினோம். அப்போது அதுதான் சிறந்ததாக விளங்கியது. இன்று அதற்கும் கேடு வந்துவிட்டது. அண்மையில் நான் படித்த அந்த அதிமுக்கிய செய்தியை இங்கு அப்படியே ஒட்டியிருக்கிறேன். இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பரப்பினால் புண்ணியம் கிட்டும். செய்தி வழங்கிய WIKIPEDIA, கீற்று, மற்றும் READER'S DIGEST க்குக் கோடான கோடி நன்றிகள்.


’பிச்பநோல் எ (BISPHENOL A) என்பது வேதிப்பொருள்ஆகும் அல்லது (BPA). இந்த வேதிப்பொருளைக் கொண்டு கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களும், மழலையர்களுக்கான பீடிங் பாட்டில்களும் தயாரிக்கப்படுகின்றன.

மனித உடலில் மிகுதியாகச் சேரும் BPA இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களையும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்தவல்லது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவோரின் சிறுநீரில் BPA ன் அளவு 69 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான ஆய்வுகளை Harvard School of Public Health (HSPH) ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். பாலிகார்பனேட் பாட்டில்களை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பாட்டில்களுக்கு மறுசுழற்சி எண் 7 தரப்பட்டுள்ளது. மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


பிச்பநோல் நஞ்சு உடலில் சேருவதால் பாலுணர்வு மழுங்குதல், பால்சுரப்பிகளில் மாற்றங்கள், விந்து உற்பத்திகுறைதல் ஆகிய குறைபாடுகள் தோன்றுகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த பாட்டில்களை பயன்படுத்துவதைவிட சூடான பாட்டில்களை பயன்படுத்தும்போது விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கின்றன. HSPH ஐச்சேர்ந்த ஜென்னி கார்வில் என்னும் ஆராய்ச்சி மாணவர் ஏப்ரல் 2008ல் 77 மாணவர்களை இதுசம்பந்தமான ஆய்விற்கு உட்படுத்தினார். இந்த மாணவர்களுக்கு ஏழுநாட்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்தில் குடிப்பதற்கான பானங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் சிறுநீரில் BPA ன் அளவும் சோதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு இரண்டு பாலிகார்பனேட் பாட்டில்களில் பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆய்விற்கு உட்பட்டவர்களின் சிறுநீரை மீண்டும் சோதித்தபோது BPAன் அளவு 69 சதவீதம் அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது.


2008 ஆம் ஆண்டு கனடாவில் குழந்தைகளுக்கான பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுவிட்டது. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர். இந்த ஆய்வு இன்னும் தொடரப்படவேண்டும் என்றும் BPA ன் தாக்கத்தால் ஏற்படும் மார்பக புற்றுநோய், இனப்பெருக்கக் குறைபாடு இவற்றை ஆராயவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.’

கீழுள்ளவை BPA வேதிப்பொருள் கலக்காதது.கற்றது ஒழுகு...

வெள்ளி, 30 ஜூலை, 2010

மரணக்காடு

0 comments

உலகத்திலேயே அதிகமானோர் தற்கொலைக்கு தேர்ந்தெடுத்த கோல்டன் கேட் பாலத்தைக் கடந்த இடுகையில் பார்த்தபோது உங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவு செய்யவே இதனை எழுதுகிறேன். 2002 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முதலிடமாகவும் இன்று இரண்டாவது இடமாகவும் திகழ்கிறது ஒரு மரணக்காடு. ஜப்பான் நாட்டில் உள்ள ஃபுஜி மலையின் (MOUNT FUJI) அடிவாரத்தில் அமைந்துள்ள இக்காட்டின் பெயர் ’அஓகிகாஹாரா’ (AOKIGAHARA). படத்தில் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் அமைந்துள்ளது.
கற்கள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்துள்ள இக்காட்டின் சில பகுதிகள் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. மத்தியப் பகுதியை உயர்ந்த மரங்கள் சூழ்ந்திருப்பதாலும் வன விலங்குகளின் நடமாட்டம் இல்லாததாலும் இக்காடு திகிலூட்டும் அளவுக்கு மயான அமைதியாக இருக்குமாம். இக்காடு எரிமலை கற்கள் நிறைந்திருக்குமாம். அதோடு இக்காட்டினுள் நுழைபவர்கள் காட்டிலேயே வழிதெரியாமல் சிக்கி கொள்ள அதிக வாய்ப்பும் உள்ளதாம். இக்காட்டில் தற்கொலை செய்துகொண்ட பிரேதங்களைத் தேடும் பணியில் ஈடுபடுபவர்கள், வந்து சென்ற இடங்களில் சில தடயங்களை எப்போதும் விட்டுச்செல்வர். அத்தடயங்கள் சுற்றுப்பயணிகள் உள்ளே செல்லவும் காட்டினுள் சிக்கியவர்கள் திரும்புவதற்கும் துணையாக உள்ளன. ஆயினும் சில கிலோமீட்டருக்குப் அப்பால் இக்காடு அதன் இயற்கை தன்மையிலேயே; மனித வருகையின் தடங்கள் குறைந்த அளவிலேயே இருக்குமாம்.


1950 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 500 பேர் தங்களது உயிரை அக்காட்டிலேயே துறந்துள்ளனர். அதில் சிலர் வழிதெரியாமல் சிக்கியவர்; பலர் தற்கொலை செய்துகொண்டவர். 1970 தொடங்கி ஆண்டுக்கொருமுறை காவல்துறை படையினரும் சில தன்னார்வளர்களும் பிணம் தேடச் செல்கிறார்கள். அதன் வாயிலாக கிடைத்த புள்ளிவிவரம்படி 1998 இல் 73 உடல்கள், 2002இல் 78 உடல்கள் என இருந்த எண்ணிக்கை 2003இல் 100 என உயர்ந்துள்ளது. அதன் பின்னர், இவ்விடம் தற்கொலைக்காகப் புகழ்ப்பெறுவதைத் தவிர்க்கவும் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிண எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.


இக்காட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை மையமாகக் கொண்டு தி ஃபோரெஸ்ட் (the forest) என்ற ஆங்கிலப் படமும் JYUKAI என்ற ஜப்பானியப் படமும் வெளிவந்துள்ளன. இக்காட்டை ஜுகாய் என்றும் அழைக்கின்றனர். கரு மரங்கள் கொண்ட கடல் என்பது அதன் பொருளாகும். இக்காடைப் பற்றி விவரங்கள் சேகரிக்கையில் பல புதிய செய்திகள் கிடைத்தன. அவற்றனைத்தையும் இங்கே சொல்ல இயலாது. ஜப்பானில் அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன. வேலையின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தூக்கு, தொடர்வண்டி முன் குதித்தல், உயரமான பகுதியிலிருந்து குதித்தல், மாத்திரைகளை உட்கொள்ளுதல் மூலம் இவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தற்கொலை செய்துகொள்ளும் நுணுக்கங்களைப் பற்றி WATARU TSURUMI என்பவர் 'the complete manual of suicide' என்று புத்தகமே வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் தற்கொலைக்கான வழிவகைகள் இல்லை. தற்கொலை செய்பவர் கையாளும் உத்திகளினால் அவருக்கு ஏற்படும் வலி, உயிர் மாய்ந்த பின்னர் உள்ள அவ்வுடலின் நிலை போன்ற செய்திகளைத் தொகுத்துள்ளார்.
சரி நாம் காட்டுக்கு வருவோம். அஓகிகாஹாரா காட்டில் தூக்கு மாட்டியும் உயரத்திலிருந்து குதித்தும் உயிர் துறக்கின்றனர். இப்போது அக்காட்டின் நுழைவாயில் அருகிலேயே பிணவறையும் உண்டு. இதில் பிணங்களை காவல் காக்கவும் ஆள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவலுக்கு ஆள் இல்லையெனில் அப்பிணவறையிலிருந்து கதறல் சத்தம் கேட்டுகொண்டே இருப்பதாகவும் பிணங்கள் நகர்வதாகவும் அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.


இக்காட்டில் தற்கொலை புரிய வருபவர்களின் மனதை மாற்றுவதற்காக சில நம்பிக்கை வாசகங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் CNN கூற்றுப்படி 2009 வரை 2645 தற்கொலைகள் இக்காட்டில் நடந்துள்ளன. கோல்டன் கேட் பாலத்திற்கு அடுத்து உலகிலேயே அதிகமான தற்கொலை நடக்குமிடமாக (இரண்டாவது நிலையில்) இக்காடு திகழ்கிறது.

பொறுமையாகப் படித்தவர்களுக்கு மேலுமொரு தகவல்...அதிகமான தற்கொலை நிகழும் இடங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைத் தவிர 4,5,6,7 ஆம் இடம் வரை அனைத்துமே பாலங்கள்தான்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

மண்ணுக்கும் விண்ணுக்கும்

2 comments

நிலத்தையும் நிலத்தையும் இணைப்பதால் பாலத்தைப் பற்றிய கடந்த இடுகைக்கு மண்ணுக்கும் மண்ணுக்கும் என்று தலைப்பிட்டிருந்தேன். இதுவும் இன்னொரு பாலத்தைப் பற்றிய அலசல்தான். ஆனால் தலைப்பு சற்று முரண்படுவதாக நீங்கள் எண்ணலாம். இந்த இடுகையைப் படித்து முடிக்கும்போது காரணம் விளங்கும்.

இம்முறை கோல்டன் கேட் எனப்படும் பாலத்தைப் பார்ப்போம். இது அமெரிக்க நாட்டில் SAN FRANCISCO ஊரில் 1937 ஆம் ஆண்டு மே 17 இல் துவங்கப்பட்டப் பாலமாகும். துவங்கிய காலத்தில் உலகிலேயே அதிக நீளமான SUSPENSION SPAN கொண்ட பாலமாகும். பாலம் என்பது நிறைய வகையிலான அமைப்பு வகையைக் கொண்டுள்ளன. அவற்றைத் தமிழ்ப்படுத்துமளவுக்கு அடியேனின் தமிழ்ப்புலமை வலுபெறவில்லை. எனவே தவிர்க்கமுடியாதவற்றை ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன். ARCH BRIDGE, SUSPENSION BRIDGE, CABLE STAYED BRIDGE, BEAM BRIDGE, CANTILEVER BRIDGE, TRUSS BRIDGE என பட்டியல் நீண்டுகொண்டேப் போகிறது. இவற்றில் கற்களால் ஆன ஒரு ARCH BRIDGEஐ படத்தில் காணலாம்.

கோல்டன் கேட் பாலம் SUSPENSION வகை பாலமாகும். அதாவது இரண்டு பிரதான கோபுரங்கள் மட்டுமே அதிவலிமைபெற நிறுவப்படும். ஏற்கனவே வேறிடத்தில் பாலத்தின் பாதை அல்லது தளம் (SPAN) அமைக்கப்பட்டிருக்கும். அதனை இந்த கோபுரத்தினூடே தொங்கச்செய்ய வலுவான இரும்புக்கம்பிகள் (CABLE) பயன்படுத்தப்படும். கோல்டன் கேட்டில் பயன்படுத்தப்பட்ட கம்பிகளின் உதாரணத்தைப் படத்தில் காண்க.

எனவே, அப்பாலத்தின் முழு வலிமையும் அந்த கோபுரத்தையும் அதன் வழி இறங்கும் கம்பிகளையும் சார்ந்தே இருக்கும்.
இதில் வியப்பூட்டும் செய்தி யாதெனில் இப்பாலம் 1937 ஆம் ஆண்டே நிறுவப்பட்டதுதான். அப்போதே அந்தளவுக்கு தொழில்நுட்பம் அபார வளர்ச்சிபெற்றுள்ளது. உலகிலேயே அதிநீளமான SPAN கொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. SPAN என்றால் முதல் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடையிலான பாலத்தின் தளமாகும்.(அதற்கு கீழ் எந்தவொரு தூணூம் தாங்கிப் பிடிக்காது). மொத்தம் 2737 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்தில் தூண்களின் துணையின்றி மத்தியில் தொங்கும் SPANஇன் நீளம் மட்டும் 1280 மீட்டராகும். இந்த SPANஇன் நீளத்தை இன்றைய நாளில் வேறு பாலங்கள் முந்திவிட்டன. நம் நாட்டில் கூட பினாங்கு பாலத்தின் மத்தியப் பகுதி தூண்கள் இன்றி கோபுரங்கள் மூலம் இறங்கும் கம்பிகள் தாங்கிப் பிடித்திருப்பதைக் கவனிக்கலாம்.


கோல்டன் கேட் பாலம் ஒரு காரணத்துக்காக உலக நிலையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்செய்தி என் ஆர்வத்தையும் அதிகமாகத் தூண்டியது. நீங்களும் அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும். இப்பாலத்தைப் பல வேளைகளில் பனி மூட்டம் சூழ்ந்திருக்கும்.

பார்ப்பதற்கு ஏதோவொரு மர்மலோகத்தை நோக்கிச் செல்வது போல இருக்கும்.ஆனால் உண்மையாகவே இன்று உலகிலேயே அதிகமான தற்கொலைகள் இப்பாலத்தில்தான் நடக்கின்றன. தற்கொலைக்குப் புகழ்வாய்ந்த இடமாக வேறொரு இடம் திகழ்ந்தது. அதனை அடுத்த இடுகையில் நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் அந்த இடத்தை இந்தப் பாலம் இன்று முந்திவிட்டது. இப்பாலம் நீரிலிருந்து 75மீட்டருக்கு மேல் உள்ளது. அங்கிருந்து கடல் நோக்கி குதிக்கும் ஒருவர் மணிக்கு 122 கிலோமீட்டர் வேகத்தில் கடல் மேற்பரப்பை மோத நேரும். இது காரை(cement)தரையை மோதுவதற்குச் சமமாகும். அப்போது உடனடியான மரணம் உறுதியாக உண்டு. தப்பினாலும் நீரின் குளிர் தாங்காமலாவது நிச்சயம் இறப்பர். இந்த உடனடி மரணத்தின் காரணமாகவே அதிகமானவர் இப்பாலத்தில் வந்து தற்கொலை செய்து கொ(ல்)ள்கின்றனர்.


2005ஆம் ஆண்டு வரை மொத்தம் 1200 தற்கொலைகள் இப்பாலத்தில் நடந்துள்ளன. இன்றைய நாளில் வாரத்திற்கு சராசரி ஒரு தற்கொலை நடக்கிறது. அதிலும் பதிவில் இல்லாத; பிணம் கிடைக்காமல் போன தற்கொலைகள் எத்தனை என்று தெரியவில்லை.தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக இப்போது இப்பாலத்தில் இரவில் நடந்துசெல்லவும் மிதிவண்டியில் செல்லவும் அனுமதி கிடையாது. பகலில் முடியும். அப்படி இருந்தும் கூட சிலர் வாடகைக்கு வண்டி எடுத்தாவது பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்று குதிக்கின்றனர். அதையும் தவிர்ப்பதற்காகக் கடைசியில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் படத்திலுள்ளதுபோல வலைகள் கட்டியுள்ளனர்.

இது பாதுகாப்புக்காக என்றாலும் அப்பாலத்தின் அழகைக் கெடுப்பதாகச் சிலர் எண்ணுகின்றனர். இப்பாலத்தில் தற்கொலை செய்பவர்களைப் பற்றி ‘the bridge' என்றவொரு செய்திப்படம் எடுத்தனர். அதில் உண்மையான 23 தற்கொலைகளை இரகசியக் கேமராக்கள் மூலம் படம் பிடித்துள்ளனர். இப்பாலத்தில் வந்து குதிக்க எண்ணுபவர்களின் மனம் கடைசி வேளையிலாவது மாறும் அல்லது மாற்றலாம் என்ற நம்பிக்கையில் பாலம் நெடுக்க ஆங்காங்கே இலவச பொது தொலைபேசிகளும் உள்ளன.அதையும் தற்கொலைகள் நிகழும் இடங்களையும் படத்தில் காண்க.


எது எவ்வாறானாலும் தற்கொலைக்கு இப்பாலம்தான் இன்று உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது.இப்பாலம் மண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமல்ல விண்ணுக்கும் கூட தொடர்புபடுத்தும். (இப்பாலம் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் வரும்)

சனி, 17 ஜூலை, 2010

மண்ணுக்கும் மண்ணுக்கும்

0 comments

இயற்கையை நேசிக்கும், இரசிக்கும் இந்த மனிதன், சக மனிதரின் அபாரமான திறன்களையும் கண்டு தினம் தினம் வியக்கிறேன். இவ்வுலகத்தை யார் படைத்தார் என்பது வினாக்குறியாகவே இருக்கிறது. ஏதோ ஒரு சத்திதான் படைத்தது என்றால், அந்த சத்தியே கண்பிதுக்கும் அளவுக்கு மனிதனின் சாகசங்கள் வளர்ந்து கொண்டு போகின்றன. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை சற்று மாற்றி ஆக்கமும் மனிதனாலே, அழிவும் மனிதனாலே என்று சொல்லலாம். மனிதனின் ஒவ்வொரு படைப்பும் ஒரு வகையில் உலகை பாதித்தாலும் சில அல்லது பல வேளைகளில் பிறரை ஊக்கப்படுத்துவதோடு உல்லாசப்படவும் செய்கிறது.


வெங்காயம் உறிக்கும் கருவி முதல் வெண்மேகங்கள் உருவாக்கும் வசதி வரை அனைத்தையும் படைத்து அசத்துகிறான். நான் கடவுள் என்று இவன் மார்தட்டிக்கொள்ளலாம். உனக்கு மேல் ஒரு சத்தி இருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்தும் வகையில் இயற்கையின் சீற்றம் இறக்கை விரித்தாலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாய் திரும்பத் திரும்ப வானோக்கி உயர்கிறான்.
அப்படி அவன் அசத்திய அற்புதங்களில் நான் அதிகம் இரசிப்பது மனிதனின் கட்டுமானத் திறனைதான். ஒரே அளவிலான பாறைகளை நேர்த்தியாகச் சற்றும் பாகை அளவு சிதையாமல் எப்படித்தான் கனத்தை மேலேற்றினான் என இன்றும் வியக்க வைக்கும் பிரமிடை உருவாக்கியவர்களை என்னவென்றுச் சொல்வது? அப்போதே அந்தளவுக்குச் சிந்திக்கும் திறனைக் கொண்டவர்களின் குருதி இன்னமும் இவ்வுலகில் ஆங்காங்கே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நிழல் விழாத கோவில், விண்ணைத் தொடும் கோபுரங்கள், புயலில் சரியாக் கட்டடங்கள் என சதா சாதித்துகொண்டுப் போகும் இவனது பாதையில் என்னை நில், கவனி எனச் செய்தது இரு நிலங்களை இணைக்கும் பாலங்கள்.

இராமாயணத்தில் இலங்கையை நோக்கியப் பாலமானது மெய்யானது எனச் சொல்கிறார்கள். இருந்தால் நலம். ஆனால் இன்று கண்கூட காணமுடிந்த பாலங்கள் அற்புதமானவை. அவற்றில் ஒன்று டென்மார்க்கையும் சுவிடனையும் இணைக்கும் ஓரேசண்டு பாலமாகும். 2 சூலை 2000 இல் துவங்கப்பட்ட இதன் நீளம் 7,845 மீட்டராகும். இப்பாலத்தில் அதிசயிக்க வேண்டியது என்னவென்றால் இஃது இரட்டை தண்டவாளங்களையும் நான்கு வழி சாலையையும் ஒன்றிணைந்த சுரங்கப் பாலமாகும். மேலுள்ளப் படம் குழப்பம் விளைவித்திருந்தால் கீழுள்ளப் படம் அதைத் தெளிவுபடுத்தும்.
எதற்கு முழுப்பாலத்தையும் கடலின் மேற்பரப்பில் கட்டாமல் பாதியைக் கடலின் கீழ் சுரங்கப்பாலமாகக் கட்டி அலட்டிக்கொள்கிறார்கள் என்று பதறாதீர். டென்மார்க்கின் தலைநகரான கோப்பென்ஹேகனில் உள்ள விமானத்தளத்தில் (கடற்கரையோரம்) விமானங்கள் தரையிரங்க வசதியாக அமையவும் வணிகக் கப்பல்கள் தடையின்றி மிதந்து செல்லவும் வழிவகுக்கவே இப்பாலத்தின் அமைப்பு இப்படியுள்ளது.


இப்பாலம் இரு வெவ்வேறான நாட்டை இணைக்கிறது என்றாலும் இப்பாலத்தினூடேச் செல்லும் பயணிகளுக்கு 'SCHENGEN' ஒப்பந்தப்படி கடப்பிதழ் சோதனை கிடையாது. 1995 இல் ஆரம்பித்து 1999 இல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பாலத்தில் உயர்வான டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் முதலில் அதிக வரவேற்பு கிட்டவில்லை என்றாலும் 2005 முதல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்னொரு வியப்பான செய்தி என்னவெனில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்டு வெடிக்காமல் போன 16 குண்டுகள் அக்கடல் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதால் பாலத்தின் கட்டுமானப் பணி 3 மாதங்கள் தாமதித்தது. இச்சுரங்கப் பாலத்தில் வாகனங்கள் தவிர மின்தொடர்வண்டியும் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பாலத்தைப் பற்றி மேலும் விபரங்கள் wikipedia வில் உள்ளன. இது போன்ற வேறு பாலங்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகையில் பகிர்கிறேன்.
 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates