திங்கள், 28 ஜூன், 2010

அஃறிணை - போங்கோ

2 comments


இந்த இடுகையில் நம்மை அல்லது நம்மில் சிலரை அதிசயமூட்டும் உயிரினங்களைப் பற்றி என்னால் கண்டறிய முடிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடலிலும் காட்டிலும் மனிதன் கால் பதித்தப் பகுதியை விட பதிக்காதப் பகுதிகளே அதிகம். ஆனால் இன்றைய நாட்களில் மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் என்று பாடுவதைவிட மனிதன் எல்லாம் தெரிந்துகொள்ள எத்தனிக்கிறான் என்பது மகிழ்ச்சியான விடயம். இதற்கு காரணம் அந்த தெளிவு வரும் நாட்களில் மனிதகுலத்துக்கு நன்மை பயக்கும் என்பதே.அப்படி மனிதன் தேடுகையில் அநேகமான அதிசயங்களையும் இயற்கையின் அற்புதங்களையும் கண்டு வியந்து பிறரையும் வியக்கச் செய்கிறான். இன்னமும் செய்வான். அவன் கண்டு சொன்னதை இந்த மனிதன் உங்களுக்குச் சொல்கிறேன்.முதல் வியப்பாக மாடு போன்றத் தோற்றமளிக்கும் ஒருவகை உயிரினத்தைப் பார்ப்போம். அஃறிணைகளை விலங்கு அல்லது பிராணி என்றழைப்பதைவிட உயிரினங்கள் என்றழைக்கவே விரும்புகிறேன். காரணம் இன்றைய சூழலில் எதுவெல்லாம் பிராணி, விலங்கு என்னும் குழுவில் சேருமென ஐயமாகவுள்ளது. சரி கதைக்கு வரும்.


படத்தில் உள்ள உயிரினத்தின் பெயர் போங்கோ ( BONGO ). இதன் அறிவியல் பெயர் TRAGELAPHUS EURYCERUS. ஆப்பிரிக்காவில் கெண்யா மலைப்பகுதிகளில் வாழும் இந்த உயிரினம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று தாழ்நிலங்களில் வசிப்பன ( western bongo ) மற்றொன்று உயர்நிலங்களில் அதாவது மலைப்பகுதிகளில் வசிப்பன ( eastern bongo ). இவற்றின் மேனி சிவந்த பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற வரிகளுடன் உள்ளன. அதுவும் ஆண் போங்கோவின் நிறம் அதன் வயது கூடும்போது மேலும் கருமையாகுமாம். பெண் இன ( கோழிக்கு சேவல்-பெட்டை, மாட்டுக்குப் பசு-காளை என்றிருக்க இதற்கு என்னவாக இருக்கும்?) போங்கோவின் நிறமோ வெளுமையாகவே இருக்குமாம். இதன் தோலில் உள்ள வெள்ளைநிற வரிகள் அதனை எதிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏதுவாக உள்ளன.
இதற்கு ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நீண்ட தடித்த சுருளானக் கொம்புகள் உள்ளன. ஆயினும் பெண் இன போங்கோவிற்கு சற்று மெல்லியதாகவே கொம்புகள் அமைந்துள்ளன. இதில் வியக்கத்தக்கது என்னவெனில் ஆண் இன போங்கோவின் கொம்புகள் 75-99 cm வரை வளருமாம். கிட்டதட்ட 1 மீட்டராகும். போங்கோவின் சினை காலம் 285 நாட்களாகும். அதாவது மனிதனைப் போலவே 9 ½ மாதங்கள்.இஃது ஒரு தாவர உண்ணி என்பதால் இலைத்தழைகள், செடிக்கொடிகள், புற்கள், வேர், தானியங்கள் மற்றும் பழங்களை விரும்பி உண்ணும். இதற்கு இன்னொரு பொருளையும் உண்ணும் பழக்கமுண்டு. இடிவிழுந்து எரிந்துபோன மரங்களின் கரித்துண்டையும் இஃது உண்ணுமாம். அதன் உடலில் உப்புச்சத்து வேண்டுமென்பதால் இவ்வாறு செய்கின்றன. இப்பழக்கம் இன்னொரு விலங்குக்கும் உண்டு. அந்த இன்னொரு விலங்கு எதுவென்று அடுத்த இடுகையில் சொல்கிறேன். அந்த இன்னொரு விலங்குக்கும் போங்கோவுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. இரண்டுக்கும் மிக நீளமான நாக்கு உள்ளது. அந்த இன்னொரு விலங்கை இப்போதைக்குப் படத்தில் காண்க.முதிர்ச்சியடைந்த ஒரு போங்கோ 3 முதல் 4 அடி உயரமும் 5 முதல் 8 அடி நீளமும் கொண்டிருக்கும். ஒரு பெண் போங்கோ 210-235 கிலோகிராம் எடை பெறுமளவுக்கு வளரும். ஆண் போங்கோ 240- 405 கிலோகிராம் வரை எடை பெறும்.

கெண்யாவில் மலைசார்ந்தப் பகுதிகளில் வாழும் இந்த விலங்கினத்தின் இன்றைய மொத்த எண்ணிக்கை மிகச்சரியாகத் தெரியாவிட்டாலும் ஏறத்தாழ 28,000 இருக்குமென கணித்துள்ளனர். அதிலும் அதன் கொம்புக்காகவும் இறைச்சிக்காகவும் மனிதர்களாலும் சிங்கம் சிறுத்தைப்போன்ற பிற கொடிய விலங்கினாலும் வேட்டையாடப்படுவதால் இதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது. போங்கோ வாழும் பகுதிகளில் வாழும் உள்ளூர் மக்கள் இவ்விலங்கைத் தொட்டாலோ உண்டாலோ அவர்களுக்கு SPASMS எனும் நோய் வருமென நம்புவதால் அதனைத் தொந்தரவு செய்வதில்லை. ஆயினும் போங்கோவின் எண்ணிக்கை கொம்புக்காக வேட்டையாடும் நடவடிக்கையால் எதிர்வரும் காலங்களில் குறையுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. எதைத்தான் விட்டு வைத்தான் இந்த கட்டையில் போகிறவன்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

நான்

0 comments

புவியியல், பூலோகம், அறிவியல், வேதியல் என்று எந்த இயலிலும் கொடிகட்டிப்பறக்கும் அளவுக்கு சாதனைச் செய்துவிட்டு இங்கு இடுகையிடவில்லை நான்.
இயற்கை இயற்கையாகவே என்னை இயற்கையை நேசிக்கச் செய்துவிட்டது. நாம் ஒருத்தியை நேசிக்கும்போது, மன்னிக்கவும், நான் ஒருத்தியையோ அல்லது நீங்கள் ஒருத்தியையோ நேசிக்கும்போது அவளை எப்படியெல்லாம் சிரத்தையெடுத்து, அக்கறையெடுத்து கவனித்துகொள்வோம்? அவளுக்கொன்றென்றால் எப்படித் துடிப்போம்? அவள் நலமாக இருக்க என்ன சாகசமெல்லாம் புரிவோம்?
அதுபோலவே இயற்கை மீது நான் கொண்ட நேசத்தைதான் இங்கு இடுகையிட்டு புலப்படுத்தி அவளைக் காக்க என் பங்கைச் செய்கிறேன்.
என் இடுகைகளில் இயலும்வரை ஆதாரப்பிழைகள் நேராமல் நான் பார்த்துகொள்கிறேன். அதற்காக நான் விரும்பிப்படிக்கும் இதழ்கள், ஊடகச்செய்திகள், இணையப்பக்கங்கள் என்பவற்றை மேற்கோளாகக்கொண்டே இங்கு உண்மையை உணர்த்துகிறேன்.

எவ்வளவு முயன்றாலும் சந்திப்பிழைகளை மட்டும் களைய கடினப்படுகிறேன்.
எனவே, அதிகமான அல்லது அபாயமான பிழைகளை இந்த வலைமனையில் கண்டால் தயவுசெய்து கருத்துரையுங்கள்.

இயற்கையை நேசியுங்கள்.

வெள்ளி, 25 ஜூன், 2010

தாகம்

0 comments


இன்று காலை எழுந்தவுடன் முதலில் எங்குச் சென்று என்ன செய்தீர்கள் என்று சற்று பின்னோக்கி நிலைவலைகளைச் செலுத்துங்கள்.

சிலர் நேரே கழிப்பறைக்குச் சென்று சற்றுநேரம் ‘நின்றுவிட்டு’ வந்திருப்பீர். சிலர் அங்கே கனத்தைக் குறைத்திருப்பீர். சிலர் மணமிழந்த முத்துப்பெட்டகத்தை நுரைக்கவைத்துத் துப்பியிருப்பீர். சிலர் கட்டழகு மேனியினை நனைத்துகொண்டு வந்திருப்பீர். பலர் அனைத்தையும் வரிசைபடி செய்திருப்பீர்.

அதன்பின்னர் நடந்தவற்றை உங்களிடமே விடுகிறேன். வேறொரு கற்பனை செய்வோமா?

ஒரு காலை வேளை எழுந்தவுடன் நீங்கள் நேரே சென்று திறக்கும்போது அது சுரக்கவில்லை. அண்டை வீட்டாரிடம் கேட்டால், அங்கேயும் அதே நிலை. முதல்நாள் தேக்கிவைத்திருந்ததை அவசரத்திற்குப் பயன்படுத்தலாம் கொஞ்சமாக. அதுவும் முடிந்துவிட்டது. உங்கள் வீட்டில் உள்ள மற்றவருக்கு எதை கொடுப்பீர்?

அதுவும் ஒருநாள் முழுக்க அது சுரக்காவிட்டால் பிழைப்பு நாறிவிடும். அப்படி இருக்க நாம் என்ன செய்கிறோம்? அள்ளி அள்ளி கீழே இரைக்கிறோம் இருக்கும்போது. இல்லாதபோது எதை இரைப்போம்? வீடு தேடி வருவதால் அதனைச் சிந்துகிறோம். நாம் தேடிபோய்க்கொண்டு வந்திருந்தால் அருந்தக்கூட அளவெடுப்போம்.
இது ‘நீரின் பயன்கள்’ என்னும் ஆறாம் வகுப்பு கட்டுரை அல்ல. அதே நீரை பற்றிய அக்கறை.


டைனாசோர் என்ற மிருகங்கள் பருகியபோது இப்பூமிப்பந்தில் இருந்த நீரின் எடை இன்றும் அப்படியேதான் இருக்கிறது. எந்த ஒரு துளி நீரும் எங்கும் மறைந்து போய்விடவில்லை. அதன் பற்றிய (என்னை) வியக்கவைக்கும் செய்திகளைப் பார்ப்போம்.இரண்டு பங்கு ‘ஹைட்ரோஜ’னுடன் ஒரு பங்கு ‘ஆக்சிஜன்’ சேர்ந்த நிலையை நீராக நாம் பார்க்கிறோம், பயன்படுத்துகிறோம். இப்பூமியில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான பகுதியில் நீர் சூழ்ந்துள்ளது. அதில் 97% உப்புநீர், அதாவது பருக இயலாதது. 2% தூய்மையான நீர் பனிப்பாறைகளாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன. மிஞ்சிய 1% நீர் மட்டுமே உலகம் முழுக்க தினசரி உபயோகத்திற்குப் பயன்படுகிறது.

இந்த 1% நீரில் மூன்றில் இரு பாகம் விவசாயத்திற்கும் பிற உணவுப்பொருள் வளர்ப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள நீரில் நாம் புழங்குகிறோம். வருடத்திற்கு 83 மில்லியன் என்ற எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டு போகும் மக்கள் தொகைக்கு இந்நீர் போதுவதும் போதாமல் போவதும் நாம் நீரைப் பேணுகிற விதத்தில்தான் உள்ளது.இன்னும் நிறைய விந்தை உள்ளன. உலக மக்களில் 46 சதவீதத்தினருக்கு நேரடி குழாய் நீர் வசதி கிடையாது. வளரும் சில நாடுகளில் நீரை பெறுவதற்கு சராசரியாக ஒரு பெண் 3.7 மைல் தூரம் நடக்கவேண்டியுள்ளது. இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பின் 1.8 பில்லியன் மக்கள் நீர் வசதியில்லாத இடத்தில் வசிப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் எண்மரில் ஒருவருக்கு தூய்மையான நீர் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 3.3 மில்லியன் மக்கள் நீர் தொடர்புடைய நோய்கண்டு மடிகின்றனர்.

நீர் தொடர்பாக இன்னும் பல எண்ணிக்கை விபரங்கள் நம்பத் தகுந்த ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பெற்று வைத்துள்ளேன். இங்கு அனைத்தையும் இட நான் விரும்பினாலும் என் விரல்கள் கண்ணீர் வடிக்கின்றன.


முந்தைய இடுகையில் நெகிழிப்பையால் மனிதகுலத்திற்கும் பாதிப்பு உண்டென்றேன். அவற்றில் காட்டாக ஒன்று, நெகிழிப்பை தானாக அழிந்துபோக ஆயிரமாண்டுகள் தேவை. அதற்கும் இந்த இடுகைக்கும் என்ன முடிச்சு என்கிறீரா? நான் போடுகிறேன் இப்போது முடிச்சை, அதாவது, தானாக அழிந்துபோக சிரமமுறும் பையை நாம் கண்ட இடங்களில் வீசுகிறோம். “5 காசு திருடினா தப்பா?” என்றெண்ணாமல் உலக மக்கள் வீசும் பையின் எண்ணிக்கையை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள். அப்படி வீசப்படும் பைகள் பூமியில் புதையுண்டு சிக்கிக்கொள்கின்றன. அவ்வாறு புதைந்த பைகளினால் மண்ணில் விழும் மழைத்துளிகள் முறையான நீர்வளப்பகுதிக்குச் செல்ல இயலாமல் ஆங்காங்கே தங்கிவிடுகின்றன. இதனால் மண்ணில் சில படிமங்களைத் தாண்டிச் சென்று இயற்கையாகச் சுத்திகரிக்கப்பட்டு மனித பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் ஊறவேண்டிய நீராதாரங்கள் வற்றிப்போகின்றன. நெகிழிப்பையைத் தவிர்ப்பதால் நீரூற்றுகள் மேலும் செழிக்கும்.


நீரின் அவசியத்தை நீங்களே அறிவீர். மழைநீர் சேமிக்கும் திட்டம் என்பதொன்று இந்திய நாட்டில் உள்ளதென தமிழ்த்திரைப்படங்கள் மூலம் கேள்வியுற்றிருக்கிறேன். நம் நாட்டில் அந்நிலை இல்லை. நமக்கு நீர் வறட்சி எப்போதாவது எங்காவது நிகழும். நமது நாட்டு நீர் விநியோகக் கட்டணத்தை அயல்நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

2009ம் ஆண்டு 100 கேலன் நீருக்கு நியூயார்க்கில் US$0.80, சன் டியாகோவில் US$1.65, பெர்லினில் US$2.52, கோப்பென்ஹேகனில் US$3.43, சிங்கப்பூரில் US$0.61 என விதிக்கப்படிகையில் நம் நாட்டில் US$0.10 மட்டுமே. (ஆதாரம் National Geographic இதழ்)

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். நாளைக் காலை பல் துலக்குகையில் வீணாகக் குழாயை வடியவிடாதீர்.

செவ்வாய், 22 ஜூன், 2010

உலகம் பேணுவோம்

2 commentsஉருவாக்கம் கண்ட நாளை கணித்திருக்கிறார்களேயொழிய கண்டவர் கிடையாது. உருவாகிய முறையும் சில/பல ஊகங்களாய் விரிகிறதேத் தவிர உண்மைநிலை இன்னமும் மயக்கமே.
ஆயினும் தொடக்க காலம் முதற்கொண்டே உயிரினம் மட்டும் ஏதோ உருவில் தொடங்கி ஏதேதோ உருவங்களில் இன்று நிரம்பி வழிகின்றது இவ்வுலகில்.

இந்த நிலை மாற்றத்தில் அல்லது முன்னேற்றத்தில் மனிதனாகிய நாம் நம் வசதிக்காகவும் தேவைக்காகவும் இயற்கை அருளியப் படைப்புகளைக் கொண்டும் அறிவியலின் அற்புதத்தை ஒருங்கே இணைத்தும் பல்வேறு பொருள்களை உருவாக்கிப் புழங்குகிறோம்.

இவ்வாறு நாம் புழங்கப் பயன்படும் பொருளும் அதன் கழிவும், மிச்சமும், மீதமும் எங்கேச் சென்று என்னவாகிறது என்பதைப் பற்றி எப்போதுமே அறிந்துகொள்ள எத்தனிப்பதில்லை. ஆனால் அவை கொட்டை மீண்டும் பழமாவது போல நம் வாழ்வைச் சிறக்க வைக்கவோ சீற்றமளிக்கவோ திரும்ப வரும் என்பது மட்டும் உறுதி.

புகழ்பெற்ற உலகம் பேணும் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று அடிக்கடி ‘WHAT YOU DO COUNTS’ என நினைவுறுத்தி எச்சரிக்கை விடுக்கின்றது. அதாவது நாம் நம் தினசரி வாழ்வில் புழங்குகிற பொருளாகட்டும் அல்லது நமது நவீன வாழ்க்கைமுறையாகட்டும். அதனால் நமக்கு விளையப்போகிற விளையத்தொடங்கிவிட்ட இன்னல்களை அவ்வப்போது படம்பிடித்துக் காட்டுகிறது அந்நிறுவனம்.

’நீ ஒருத்தன் மாறிட்டா உலகத்துக்கு நல்லது நடந்திடுமா’ என்கிறாள் என் துணைவி. என்னைப் பார்த்தும் என்னைப் பின்பற்றியும் எவரும் மாறாவிட்டாலும் நான் சரியாக இருக்கிறேன், என் பங்கைச் சரிவர செய்கிறேன் என்ற அகக்களிப்பே எனக்கு போதுமென்கிறேன்.

இப்ப என்னதான் செய்யனும் என்கிறீரா? இது அறிமுகம்தான். போகப்போகச் சொல்கிறேன். ஆயினும் இந்த இடுகையில் நெகிழி என்பதை நுனிப்புல் மேய்வோமே..


“நெகிழி (PLASTIC) என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். பீங்கான், கண்ணாடி போன்ற பொருள்கள் முறுகலான பொருள்கள். அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். இரும்பு (எஃகு), வெள்ளி தங்கம் போன்ற மாழைகளை (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருள்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் (yield) என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக வேதியியல் முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு மூலக்கூறு (சேர்மம்) வடிவை பல்லுருத் தொடராக செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும்.” நன்றி: wikipedia


இது நெகிழிப் பற்றிய அறிவியல் விளக்கம். நமக்கும் இதற்கும் என்னத் தொடர்பு என்பதை நான் சொல்லி நீங்களறிய வேண்டுமா? ஒரு வெள்ளிக்குப் பொருள் வாங்கினால்கூட நெகிழிப்பையில் போடப்பட்டுதான் பெற்றுக்கொள்கிறோம். அவ்வாறாக எளிதில் கிடைக்கக்கூடிய அப்பொருளானது வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கடல்வாழ் மற்றும் பறவைகளின் உயிர்கொள்ளியாகத் திகழ்கின்றது.அழிந்துக்கொண்டிருக்கும் உயிரினக் கூட்டத்தில் ஒன்றான இராட்சத கடலாமைகள் இதற்கு முதல்நிலை பலிகடாவாகின்றன. அவைக்கு அதிகச் சத்தளிக்கவல்ல ‘jellyfish’ என்னும் மீனும் நெகிழிப்பைப் போன்றதோர் உருவமே கொண்டுள்ளது. எனவே, கடலாமைகள் மீனென்றெண்ணி வெறும் பையைத் தின்று மடிகின்றன. இராட்சத கடலாமைகள் உண்டு மடியும் கழிவுப்பொருள்களில் நெகிழிப்பை முதலிடம் வகிக்கின்றது.

ஆங்காங்கே வீசப்படும் இத்தகைய உயிர்கொள்ளியான நெகிழிப்பை தானாகவே (காலம்) அதன் நிலையை மாய்த்துகொள்ள ஓராயிரம் ஆண்டுகள் பிடிக்குமாம். பாதிப்பு ஆமைக்குத்தானே என்றெண்ணாதீர்!! ஏதாவதொருவகையில் நமக்கும் பாதிப்புண்டு என்பது உறுதி.எண் விடும் எச்சரிக்கை :
• வருடத்திற்கு 500 பில்லியன் முதல் 1 திரில்லியன் வரை நெகிழிப்பைகள் புழக்கத்தில் உள்ளன.
• ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1 பில்லியன் பைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுவதாக்க் கணிக்கப்படுகிறது.
• அமெரிக்க நாட்டில் மட்டும் வருடத்திற்கு 100 பில்லியன் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இச்சிக்கலைக் களையும் பொருட்டு உலக நாடுகள் நெகிழிப்பைக்குக் கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளனர். இன்றல்ல, 2002 இல் அயர்லாந்து நாட்டில் ஒரு பைக்கு 20 காசு விதிக்கத் தொடங்கி இன்று 90% நெகிழிப்பை பயன்பாடு குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 90% வணிக நிறுவனங்கள் இத்திட்டத்திற்குச் சம்மதித்துள்ளன. தைவான் நாட்டில் 69% நெகிழிப்பை அல்ல, மாறாக நெகிழியால் உருவாக்கப்படும் பொருள்களின் பயன்பாடு சரிந்துள்ளது.நம் நாட்டில் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலம் தொடங்கி இப்போது சரவாக் மாநிலத்தில் கூட “ NO PLASTIC BAG DAY “ என்கிற திட்டத்தை அமலாக்கப்படுத்தியுள்ளது. மலேசியா முழுவதுமுள்ள சில நிறுவனங்களின் திரையரங்குகளில் கூட பைகள் தரப்படுவதில்லை. இன்னும் யாமறியாத பல இடங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருவதாக நம்புகிறேன். இத்திட்டமானது குறிப்பிட்ட நாட்களில் அம்மாநிலத்தில் உள்ள, பங்கேற்கும் அங்காடிகளில் வாங்கப்படும் பொருள்களுக்குப் பை கொடுக்கப்படமாட்டாது. மீறி வேண்டுமென்பவர்கள் பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். அதே வேளையில் நெகிழியில் செய்யப்படாத பலமுறை பயன்படுத்தக்கூடிய பைகளும் விற்பனையில் உள்ளன.நாம் செய்யவேண்டியது இயன்றவரை இந்நெகிழிப்பையின் பயன்பாட்டை முற்றாக இல்லாவிட்டாலும் முடிந்தமட்டில் தவிர்க்கப் பார்ப்போமே. மாற்றத்தின் பயன் இன்றல்ல, நாளை தெரியும். நம்புங்கள்.

சனி, 19 ஜூன், 2010

மயக்கம்

0 comments
யாம் என்ன எழுத விழைகிறோம் என்பது எமக்கே மயக்கமாக இருந்தது முதலில். இன்னமும் குழம்பியே இருக்கிறேன். தெளிவடைந்ததும் துவங்குவேன். அதுவரை தூங்குகிறேனே..
 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates