வெள்ளி, 30 ஜூலை, 2010

மரணக்காடு

0 comments

உலகத்திலேயே அதிகமானோர் தற்கொலைக்கு தேர்ந்தெடுத்த கோல்டன் கேட் பாலத்தைக் கடந்த இடுகையில் பார்த்தபோது உங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவு செய்யவே இதனை எழுதுகிறேன். 2002 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முதலிடமாகவும் இன்று இரண்டாவது இடமாகவும் திகழ்கிறது ஒரு மரணக்காடு. ஜப்பான் நாட்டில் உள்ள ஃபுஜி மலையின் (MOUNT FUJI) அடிவாரத்தில் அமைந்துள்ள இக்காட்டின் பெயர் ’அஓகிகாஹாரா’ (AOKIGAHARA). படத்தில் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் அமைந்துள்ளது.
கற்கள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்துள்ள இக்காட்டின் சில பகுதிகள் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. மத்தியப் பகுதியை உயர்ந்த மரங்கள் சூழ்ந்திருப்பதாலும் வன விலங்குகளின் நடமாட்டம் இல்லாததாலும் இக்காடு திகிலூட்டும் அளவுக்கு மயான அமைதியாக இருக்குமாம். இக்காடு எரிமலை கற்கள் நிறைந்திருக்குமாம். அதோடு இக்காட்டினுள் நுழைபவர்கள் காட்டிலேயே வழிதெரியாமல் சிக்கி கொள்ள அதிக வாய்ப்பும் உள்ளதாம். இக்காட்டில் தற்கொலை செய்துகொண்ட பிரேதங்களைத் தேடும் பணியில் ஈடுபடுபவர்கள், வந்து சென்ற இடங்களில் சில தடயங்களை எப்போதும் விட்டுச்செல்வர். அத்தடயங்கள் சுற்றுப்பயணிகள் உள்ளே செல்லவும் காட்டினுள் சிக்கியவர்கள் திரும்புவதற்கும் துணையாக உள்ளன. ஆயினும் சில கிலோமீட்டருக்குப் அப்பால் இக்காடு அதன் இயற்கை தன்மையிலேயே; மனித வருகையின் தடங்கள் குறைந்த அளவிலேயே இருக்குமாம்.


1950 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 500 பேர் தங்களது உயிரை அக்காட்டிலேயே துறந்துள்ளனர். அதில் சிலர் வழிதெரியாமல் சிக்கியவர்; பலர் தற்கொலை செய்துகொண்டவர். 1970 தொடங்கி ஆண்டுக்கொருமுறை காவல்துறை படையினரும் சில தன்னார்வளர்களும் பிணம் தேடச் செல்கிறார்கள். அதன் வாயிலாக கிடைத்த புள்ளிவிவரம்படி 1998 இல் 73 உடல்கள், 2002இல் 78 உடல்கள் என இருந்த எண்ணிக்கை 2003இல் 100 என உயர்ந்துள்ளது. அதன் பின்னர், இவ்விடம் தற்கொலைக்காகப் புகழ்ப்பெறுவதைத் தவிர்க்கவும் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிண எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.


இக்காட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை மையமாகக் கொண்டு தி ஃபோரெஸ்ட் (the forest) என்ற ஆங்கிலப் படமும் JYUKAI என்ற ஜப்பானியப் படமும் வெளிவந்துள்ளன. இக்காட்டை ஜுகாய் என்றும் அழைக்கின்றனர். கரு மரங்கள் கொண்ட கடல் என்பது அதன் பொருளாகும். இக்காடைப் பற்றி விவரங்கள் சேகரிக்கையில் பல புதிய செய்திகள் கிடைத்தன. அவற்றனைத்தையும் இங்கே சொல்ல இயலாது. ஜப்பானில் அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன. வேலையின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தூக்கு, தொடர்வண்டி முன் குதித்தல், உயரமான பகுதியிலிருந்து குதித்தல், மாத்திரைகளை உட்கொள்ளுதல் மூலம் இவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தற்கொலை செய்துகொள்ளும் நுணுக்கங்களைப் பற்றி WATARU TSURUMI என்பவர் 'the complete manual of suicide' என்று புத்தகமே வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் தற்கொலைக்கான வழிவகைகள் இல்லை. தற்கொலை செய்பவர் கையாளும் உத்திகளினால் அவருக்கு ஏற்படும் வலி, உயிர் மாய்ந்த பின்னர் உள்ள அவ்வுடலின் நிலை போன்ற செய்திகளைத் தொகுத்துள்ளார்.
சரி நாம் காட்டுக்கு வருவோம். அஓகிகாஹாரா காட்டில் தூக்கு மாட்டியும் உயரத்திலிருந்து குதித்தும் உயிர் துறக்கின்றனர். இப்போது அக்காட்டின் நுழைவாயில் அருகிலேயே பிணவறையும் உண்டு. இதில் பிணங்களை காவல் காக்கவும் ஆள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவலுக்கு ஆள் இல்லையெனில் அப்பிணவறையிலிருந்து கதறல் சத்தம் கேட்டுகொண்டே இருப்பதாகவும் பிணங்கள் நகர்வதாகவும் அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.


இக்காட்டில் தற்கொலை புரிய வருபவர்களின் மனதை மாற்றுவதற்காக சில நம்பிக்கை வாசகங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் CNN கூற்றுப்படி 2009 வரை 2645 தற்கொலைகள் இக்காட்டில் நடந்துள்ளன. கோல்டன் கேட் பாலத்திற்கு அடுத்து உலகிலேயே அதிகமான தற்கொலை நடக்குமிடமாக (இரண்டாவது நிலையில்) இக்காடு திகழ்கிறது.

பொறுமையாகப் படித்தவர்களுக்கு மேலுமொரு தகவல்...அதிகமான தற்கொலை நிகழும் இடங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைத் தவிர 4,5,6,7 ஆம் இடம் வரை அனைத்துமே பாலங்கள்தான்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

மண்ணுக்கும் விண்ணுக்கும்

2 comments

நிலத்தையும் நிலத்தையும் இணைப்பதால் பாலத்தைப் பற்றிய கடந்த இடுகைக்கு மண்ணுக்கும் மண்ணுக்கும் என்று தலைப்பிட்டிருந்தேன். இதுவும் இன்னொரு பாலத்தைப் பற்றிய அலசல்தான். ஆனால் தலைப்பு சற்று முரண்படுவதாக நீங்கள் எண்ணலாம். இந்த இடுகையைப் படித்து முடிக்கும்போது காரணம் விளங்கும்.

இம்முறை கோல்டன் கேட் எனப்படும் பாலத்தைப் பார்ப்போம். இது அமெரிக்க நாட்டில் SAN FRANCISCO ஊரில் 1937 ஆம் ஆண்டு மே 17 இல் துவங்கப்பட்டப் பாலமாகும். துவங்கிய காலத்தில் உலகிலேயே அதிக நீளமான SUSPENSION SPAN கொண்ட பாலமாகும். பாலம் என்பது நிறைய வகையிலான அமைப்பு வகையைக் கொண்டுள்ளன. அவற்றைத் தமிழ்ப்படுத்துமளவுக்கு அடியேனின் தமிழ்ப்புலமை வலுபெறவில்லை. எனவே தவிர்க்கமுடியாதவற்றை ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன். ARCH BRIDGE, SUSPENSION BRIDGE, CABLE STAYED BRIDGE, BEAM BRIDGE, CANTILEVER BRIDGE, TRUSS BRIDGE என பட்டியல் நீண்டுகொண்டேப் போகிறது. இவற்றில் கற்களால் ஆன ஒரு ARCH BRIDGEஐ படத்தில் காணலாம்.

கோல்டன் கேட் பாலம் SUSPENSION வகை பாலமாகும். அதாவது இரண்டு பிரதான கோபுரங்கள் மட்டுமே அதிவலிமைபெற நிறுவப்படும். ஏற்கனவே வேறிடத்தில் பாலத்தின் பாதை அல்லது தளம் (SPAN) அமைக்கப்பட்டிருக்கும். அதனை இந்த கோபுரத்தினூடே தொங்கச்செய்ய வலுவான இரும்புக்கம்பிகள் (CABLE) பயன்படுத்தப்படும். கோல்டன் கேட்டில் பயன்படுத்தப்பட்ட கம்பிகளின் உதாரணத்தைப் படத்தில் காண்க.

எனவே, அப்பாலத்தின் முழு வலிமையும் அந்த கோபுரத்தையும் அதன் வழி இறங்கும் கம்பிகளையும் சார்ந்தே இருக்கும்.
இதில் வியப்பூட்டும் செய்தி யாதெனில் இப்பாலம் 1937 ஆம் ஆண்டே நிறுவப்பட்டதுதான். அப்போதே அந்தளவுக்கு தொழில்நுட்பம் அபார வளர்ச்சிபெற்றுள்ளது. உலகிலேயே அதிநீளமான SPAN கொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. SPAN என்றால் முதல் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடையிலான பாலத்தின் தளமாகும்.(அதற்கு கீழ் எந்தவொரு தூணூம் தாங்கிப் பிடிக்காது). மொத்தம் 2737 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்தில் தூண்களின் துணையின்றி மத்தியில் தொங்கும் SPANஇன் நீளம் மட்டும் 1280 மீட்டராகும். இந்த SPANஇன் நீளத்தை இன்றைய நாளில் வேறு பாலங்கள் முந்திவிட்டன. நம் நாட்டில் கூட பினாங்கு பாலத்தின் மத்தியப் பகுதி தூண்கள் இன்றி கோபுரங்கள் மூலம் இறங்கும் கம்பிகள் தாங்கிப் பிடித்திருப்பதைக் கவனிக்கலாம்.


கோல்டன் கேட் பாலம் ஒரு காரணத்துக்காக உலக நிலையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்செய்தி என் ஆர்வத்தையும் அதிகமாகத் தூண்டியது. நீங்களும் அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும். இப்பாலத்தைப் பல வேளைகளில் பனி மூட்டம் சூழ்ந்திருக்கும்.

பார்ப்பதற்கு ஏதோவொரு மர்மலோகத்தை நோக்கிச் செல்வது போல இருக்கும்.ஆனால் உண்மையாகவே இன்று உலகிலேயே அதிகமான தற்கொலைகள் இப்பாலத்தில்தான் நடக்கின்றன. தற்கொலைக்குப் புகழ்வாய்ந்த இடமாக வேறொரு இடம் திகழ்ந்தது. அதனை அடுத்த இடுகையில் நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் அந்த இடத்தை இந்தப் பாலம் இன்று முந்திவிட்டது. இப்பாலம் நீரிலிருந்து 75மீட்டருக்கு மேல் உள்ளது. அங்கிருந்து கடல் நோக்கி குதிக்கும் ஒருவர் மணிக்கு 122 கிலோமீட்டர் வேகத்தில் கடல் மேற்பரப்பை மோத நேரும். இது காரை(cement)தரையை மோதுவதற்குச் சமமாகும். அப்போது உடனடியான மரணம் உறுதியாக உண்டு. தப்பினாலும் நீரின் குளிர் தாங்காமலாவது நிச்சயம் இறப்பர். இந்த உடனடி மரணத்தின் காரணமாகவே அதிகமானவர் இப்பாலத்தில் வந்து தற்கொலை செய்து கொ(ல்)ள்கின்றனர்.


2005ஆம் ஆண்டு வரை மொத்தம் 1200 தற்கொலைகள் இப்பாலத்தில் நடந்துள்ளன. இன்றைய நாளில் வாரத்திற்கு சராசரி ஒரு தற்கொலை நடக்கிறது. அதிலும் பதிவில் இல்லாத; பிணம் கிடைக்காமல் போன தற்கொலைகள் எத்தனை என்று தெரியவில்லை.தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக இப்போது இப்பாலத்தில் இரவில் நடந்துசெல்லவும் மிதிவண்டியில் செல்லவும் அனுமதி கிடையாது. பகலில் முடியும். அப்படி இருந்தும் கூட சிலர் வாடகைக்கு வண்டி எடுத்தாவது பாலத்தின் மையப் பகுதிக்குச் சென்று குதிக்கின்றனர். அதையும் தவிர்ப்பதற்காகக் கடைசியில் பாலத்தின் கீழ்ப்பகுதியில் படத்திலுள்ளதுபோல வலைகள் கட்டியுள்ளனர்.

இது பாதுகாப்புக்காக என்றாலும் அப்பாலத்தின் அழகைக் கெடுப்பதாகச் சிலர் எண்ணுகின்றனர். இப்பாலத்தில் தற்கொலை செய்பவர்களைப் பற்றி ‘the bridge' என்றவொரு செய்திப்படம் எடுத்தனர். அதில் உண்மையான 23 தற்கொலைகளை இரகசியக் கேமராக்கள் மூலம் படம் பிடித்துள்ளனர். இப்பாலத்தில் வந்து குதிக்க எண்ணுபவர்களின் மனம் கடைசி வேளையிலாவது மாறும் அல்லது மாற்றலாம் என்ற நம்பிக்கையில் பாலம் நெடுக்க ஆங்காங்கே இலவச பொது தொலைபேசிகளும் உள்ளன.அதையும் தற்கொலைகள் நிகழும் இடங்களையும் படத்தில் காண்க.


எது எவ்வாறானாலும் தற்கொலைக்கு இப்பாலம்தான் இன்று உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது.இப்பாலம் மண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமல்ல விண்ணுக்கும் கூட தொடர்புபடுத்தும். (இப்பாலம் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் வரும்)

சனி, 17 ஜூலை, 2010

மண்ணுக்கும் மண்ணுக்கும்

0 comments

இயற்கையை நேசிக்கும், இரசிக்கும் இந்த மனிதன், சக மனிதரின் அபாரமான திறன்களையும் கண்டு தினம் தினம் வியக்கிறேன். இவ்வுலகத்தை யார் படைத்தார் என்பது வினாக்குறியாகவே இருக்கிறது. ஏதோ ஒரு சத்திதான் படைத்தது என்றால், அந்த சத்தியே கண்பிதுக்கும் அளவுக்கு மனிதனின் சாகசங்கள் வளர்ந்து கொண்டு போகின்றன. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை சற்று மாற்றி ஆக்கமும் மனிதனாலே, அழிவும் மனிதனாலே என்று சொல்லலாம். மனிதனின் ஒவ்வொரு படைப்பும் ஒரு வகையில் உலகை பாதித்தாலும் சில அல்லது பல வேளைகளில் பிறரை ஊக்கப்படுத்துவதோடு உல்லாசப்படவும் செய்கிறது.


வெங்காயம் உறிக்கும் கருவி முதல் வெண்மேகங்கள் உருவாக்கும் வசதி வரை அனைத்தையும் படைத்து அசத்துகிறான். நான் கடவுள் என்று இவன் மார்தட்டிக்கொள்ளலாம். உனக்கு மேல் ஒரு சத்தி இருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்தும் வகையில் இயற்கையின் சீற்றம் இறக்கை விரித்தாலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாய் திரும்பத் திரும்ப வானோக்கி உயர்கிறான்.
அப்படி அவன் அசத்திய அற்புதங்களில் நான் அதிகம் இரசிப்பது மனிதனின் கட்டுமானத் திறனைதான். ஒரே அளவிலான பாறைகளை நேர்த்தியாகச் சற்றும் பாகை அளவு சிதையாமல் எப்படித்தான் கனத்தை மேலேற்றினான் என இன்றும் வியக்க வைக்கும் பிரமிடை உருவாக்கியவர்களை என்னவென்றுச் சொல்வது? அப்போதே அந்தளவுக்குச் சிந்திக்கும் திறனைக் கொண்டவர்களின் குருதி இன்னமும் இவ்வுலகில் ஆங்காங்கே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நிழல் விழாத கோவில், விண்ணைத் தொடும் கோபுரங்கள், புயலில் சரியாக் கட்டடங்கள் என சதா சாதித்துகொண்டுப் போகும் இவனது பாதையில் என்னை நில், கவனி எனச் செய்தது இரு நிலங்களை இணைக்கும் பாலங்கள்.

இராமாயணத்தில் இலங்கையை நோக்கியப் பாலமானது மெய்யானது எனச் சொல்கிறார்கள். இருந்தால் நலம். ஆனால் இன்று கண்கூட காணமுடிந்த பாலங்கள் அற்புதமானவை. அவற்றில் ஒன்று டென்மார்க்கையும் சுவிடனையும் இணைக்கும் ஓரேசண்டு பாலமாகும். 2 சூலை 2000 இல் துவங்கப்பட்ட இதன் நீளம் 7,845 மீட்டராகும். இப்பாலத்தில் அதிசயிக்க வேண்டியது என்னவென்றால் இஃது இரட்டை தண்டவாளங்களையும் நான்கு வழி சாலையையும் ஒன்றிணைந்த சுரங்கப் பாலமாகும். மேலுள்ளப் படம் குழப்பம் விளைவித்திருந்தால் கீழுள்ளப் படம் அதைத் தெளிவுபடுத்தும்.




எதற்கு முழுப்பாலத்தையும் கடலின் மேற்பரப்பில் கட்டாமல் பாதியைக் கடலின் கீழ் சுரங்கப்பாலமாகக் கட்டி அலட்டிக்கொள்கிறார்கள் என்று பதறாதீர். டென்மார்க்கின் தலைநகரான கோப்பென்ஹேகனில் உள்ள விமானத்தளத்தில் (கடற்கரையோரம்) விமானங்கள் தரையிரங்க வசதியாக அமையவும் வணிகக் கப்பல்கள் தடையின்றி மிதந்து செல்லவும் வழிவகுக்கவே இப்பாலத்தின் அமைப்பு இப்படியுள்ளது.


இப்பாலம் இரு வெவ்வேறான நாட்டை இணைக்கிறது என்றாலும் இப்பாலத்தினூடேச் செல்லும் பயணிகளுக்கு 'SCHENGEN' ஒப்பந்தப்படி கடப்பிதழ் சோதனை கிடையாது. 1995 இல் ஆரம்பித்து 1999 இல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பாலத்தில் உயர்வான டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் முதலில் அதிக வரவேற்பு கிட்டவில்லை என்றாலும் 2005 முதல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்னொரு வியப்பான செய்தி என்னவெனில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்டு வெடிக்காமல் போன 16 குண்டுகள் அக்கடல் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதால் பாலத்தின் கட்டுமானப் பணி 3 மாதங்கள் தாமதித்தது. இச்சுரங்கப் பாலத்தில் வாகனங்கள் தவிர மின்தொடர்வண்டியும் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பாலத்தைப் பற்றி மேலும் விபரங்கள் wikipedia வில் உள்ளன. இது போன்ற வேறு பாலங்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகையில் பகிர்கிறேன்.

புதன், 14 ஜூலை, 2010

டப்பா

0 comments
மேலேயுள்ள பொருள் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? பார்ப்பதற்கு ஏதோ ஒரு வாகனத்தின் உபரிப்பாகம் போன்று தோற்றமளிக்கும் இப்பொருள் உண்மையில் என்னவாக இருக்குமென்று எனக்கும் தெரியாது. ஆனால் எதனால் செய்யப்பட்டது என்பது தெரியும். இன்றைய வாழ்க்கையில் இப்படத்தில் உள்ள பொருளை உருவாக்கிய மூலப்பொருளானது நாம் தினசரி அல்லது மாதத்தில் ஒருநாளாவது சந்திக்கக்கூடிய ஒன்றுதான்.


இந்த இடுகையில் நான் அலசுவது ‘போலிசிடிரின்’ என்பதைப் பற்றிதான். திருமண விருந்துகளில் போலிசிடிரின் தட்டுகளைப் பயன்படுத்துவது குறைவுதான்; ஆனால் குவளைகள் பயன்படுத்துவர். உணவுக்கு முன் ஒரு குவளை, உண்ணும்போது இரு குவளை, உண்ண பின்னர் மீண்டும் ஒரு குவளை. அதிகமாக நீர் குடிப்பது ஆரோக்கியமான விடயம்தான். பாராட்டுக்கள். ஆனால், ஒவ்வொரு முறை நீரருந்துவதற்கும் வெவ்வேறு குவளைகளைப் பயன்படுத்துவர். முந்தையக் குவளைகளை வீசுவர் அல்லது உட்கார்ந்த இடத்திலேயே விட்டுவிடுவர். தான் பயன்படுத்திய குவளையைத் திரும்பப் பயன்படுத்துவதில் என்ன தரக்குறைவோ?


திருமணத்தைவிட்டு திருவிழாவிற்குச் சென்றால் ‘கொடுமை கொடுமைனு கோவிலுக்குப் போன’ கதைதான். இப்போது பெரும்பாலான கோவில் அன்னதானங்களுக்கு வாழையிலைப் பயன்படுத்துவதே இல்லை. போலிசிடிரின் தட்டும் குவளையும்தான். அதுவும் வீசுவதற்கு ஒரு பைக்கூட இருக்காது, ஏதாவது மரத்தடிதான் குப்பைமேடாகும். அந்தக் குப்பைகளை முறையாக அள்ளி கொட்டுவோரும் உண்டு, ஆற்றில் கொட்டுவோரும் உண்டு. போலிசிடிரினால் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் உணவு கடைகளிலும் பயன்பாட்டில் உள்ளன.


போலிசிடிரினால் உணவு பொட்டலங்கள் மட்டுமல்ல, விலையுயர்ந்த கண்ணாடி மற்றும் மின்சாரப் பொருட்கள் உடையாமலிருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தவிர குறுந்தகட்டின் கண்ணாடி போன்ற உறை, தீப்பிடித்தால் புகையை உணர்ந்து நீர் பாய்ச்சும் கருவி போன்ற பொருள்களும் செய்யப்படுகின்றன. இந்தப் போலிசிடிரின் தானாக அழிய நீண்ட நாட்களாகும். ஆனால் மறுபயனீடு செய்யலாம். மறுபயனீடு செய்யக்கூடிய போலிசிடிரினைக் கண்டறியப் படத்தில் உள்ள குறியீடு பொரிக்கப்பட்டிருக்கும்.


மேலும் போலிசிடிரின் பற்றி அலசினால் அது அறிவியல் சார்ந்ததாக நீளும். சொல்லவந்த கதைக்கு வந்து விடுகிறேன். போலிசிடிரினால் செய்யப்பட்ட உணவு தட்டுகள், குவளைகள், பொட்டலங்கள் ஆற்றிலும் கடற்கரையிலும் அதிகமான தூய்மைக்கேட்டை விளைவிக்கின்றன. நீர்வீழ்ச்சிகளில் குளிக்க செல்வோர்கள் கூட உணவெடுத்துச் சென்று அப்பொட்டலங்களையும் தட்டுகளையும் அங்கேயே வீசுகின்றனர். இந்த தூய்மைக்கேட்டைத் தவிற்கும் பொருட்டாக பினாங்கு மாநிலத்தில் போலிசிடிரின் பயன்பாட்டை 2011 சனவரி மாதம் முதல் தடை செய்யவுள்ளனர். நெகிழிப்பையின் பயன்பாட்டை குறைக்க நம் நாட்டில் நடவடிக்கை எடுத்த முதல் மாநிலமான பினாங்கே இதையும் துவக்குவது போற்றதற்குரிய விடயமாகும்.


ஆனால் இதில் வருத்தமளிக்கும் செய்தி ஒன்றும் உள்ளது. பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவின் போது இலவசமாக வழங்கப்படும் மற்றும் விற்கப்படும் உணவுக்காக சிலாங்கூரிலும் பினாங்கிலும் பயன்படுத்தப்பட்ட போலிசிடிரின் பொட்டலங்களின் எண்ணிக்கையை ஆய்ந்துள்ளது. சிலாங்கூரில் 630,000 மற்றும் பினாங்கில் 347,000 பொலிசிடிரின் உணவு தட்டுகளும் குவளைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது என்பது இங்கு சிந்திக்கவேண்டியது.


மாநில ரீதியில் பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை விருந்துண்ணச் செல்லும்போதும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போதும் செயலில் காட்டுவோம்.


ஞாயிறு, 11 ஜூலை, 2010

தடம் பதித்தவை 1

0 comments



இப்பூவுலகில் பிறந்த அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும்....ரொம்பப் பழைய கட்டுரை அமைப்புப் போல உள்ளதா? சரி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- பிறந்த பின்னர், யாதும் ஊரே யாவரும் கேளீர் என கலைஞர் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்பது உங்கள் உணர்வைப் பொருத்தது.


அவ்வரிகளுக்கும் இந்த இடுகைக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. ஆனால் யாதும் ஊரே என்பதற்கொப்ப எல்லா ஊரிலும் என் தடமிருக்க வேண்டும் என்ற பேராசை எனக்குண்டு. நான் தொடக்கப்பள்ளியில் பயிலும்போது கோலாலும்பூர் எனும் ஊரானது எனக்கு ஏதோ அயல்நாடு போன்றதொரு தோற்றமளித்தது. 1982- 1989 வரை செர்சோனீஸ் தோட்டத்தைப் பிறப்பூராகவும் (இன்றுமதுவேயென் பிறப்பூர்) வாழ்வைத் தொடங்கிய, தொடக்கிவைத்த நற்பேறு கொண்ட மண்ணாகவும் கொண்டிருந்த எனக்கு கோலாலும்பூர் மட்டுமல்ல, என் மாநிலத்திலுள்ள ஈப்போ கூட அயல்நாடே. என் அப்பா என்னைத் தைப்பூசத்துக்கு அழைத்து சென்ற அழகைக் கவனியுங்களேன்.








  • வீட்டிலிருந்து படகுதுறை வரை மிதிவண்டி


  • சிறிய ஆற்றைக் கடக்க படத்தில் காணப்படும் படகு (ferry)


  • கோலக்குராவிலிருந்து பாரிட் புந்தாருக்கு பேருந்து


  • அங்கிருந்து பட்டர்வொர்த்துக்கு மற்றொரு பேருந்து


  • கடலைக் கடக்க இன்னொரு படகு (ferry)


  • அங்கிருந்து கோயிலுக்கு மேலுமொரு பேருந்து


இது அன்றைய நிலை; இன்றைய நிலை வேறு என்றும் முற்றாகச் சொல்லிவிட இயலாது. இன்றும்கூட நம் நாட்டில் சில மாணவர்கள் அனுதினமும் பள்ளிக்குச் செல்லவே அல்லல்படுகின்றனர்.



ஆயினும் இன்று அந்தத் தோட்டத்திலிருந்து சற்றே தொலைவில் வாழுமெனக்கு சிறுவயதிலிருந்த எண்ணமும் செயலும் அநேகமாக மாறிவிட்டது. நாளைக்கு கோலாலும்பூர் செல்லவேண்டுமென்றாலும் எந்தவொரு சிக்கலுமில்லை. விரிந்த சாலையில் விரைந்து செல்ல வாகன வசதியோடு வாழும் நான், மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் மயில்வாகனனின் மற்ற பெயர்களைச் சூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளும் வாங்கித்தந்துவிட்டு தனக்கு மட்டும் ஒரு மிதிவண்டியையே கடைசி மூச்சு வரை வாகனமாகப் பயன்படுத்திவிட்டு மறைந்த என் தந்தையை இக்கணம் நினைத்துப் பார்க்கிறேன்.



(1 நிமிடத்திற்குப் பிறகு) இன்று மற்ற இடங்களுக்கு அலுவலாகச் செல்வதோ அளவளாடச் செல்வதோ மாபெரும் சவாலில்லை. எல்லா வசதிகளும் உண்டு. நமக்கு வேண்டியது பணம் மட்டுமே. அதுவும் ஏர் ஆசியா இருக்கையில் யார் வேண்டுமானாலும் பறக்கலாம் (everyone can fly). அப்படி நான் சென்ற, செல்ல விரும்பும், செல்லப்போகும் இடங்களைப் பற்றியப் பதிவே இது.







அப்ப இவ்ளோ நேரம் கதைக்கே வரல்லியா நீ என்கிறீர்களா? என்ன செய்வது, நமது தொழில் அப்படி. எதுவாகயிருந்தாலும் பீடிகை பலமாக இருக்கவேண்டுமே. நான் முதன்முதலாக தடம் பதித்த இடமென்று எதைச்சொல்வது... என்னம்மாவின் வயிறுதான் என்றால் மறுபடியும் பீடிகையா என்பீர்கள். அந்த நாடு இந்த நாடு என்று எல்லா நாட்டையும் பார்த்தாக வேண்டுமென்று எல்லாருக்கும் கனவு இருக்கும், ஆனால் நம் நாட்டிலுள்ள அற்புதங்களை முதலில் பார்த்து தீர்க்கவேண்டும் என்பது எனது வெறி. அப்படி பார்க்கையில் நான் ஐந்தாம் ஆண்டு பயில்கையில் பினாங்கு தீவை சக நண்பர்களோடு வலம் வந்தேன். அதன் ஆதாரங்கள் நினைவுகளில் மட்டுமே. பிறகு மேற்படிப்பு காலத்தில் நிறைய இடங்களுக்குச் சென்ற அனுபவம் உண்டு. காதலில் விழுந்தபின்னர் கனவுந்து ஓட்டுநரின் மகளை யார் கண்ணிலும் படாமல் அழைத்துகொண்டு சில இடங்களுக்குச் சென்றதுண்டு. இன்று அவர் மகளை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல அனுமதி அட்டை உண்டு (கல்யாணம் ஆயிடுச்சுப்பா) ஆனால் கனவுந்து ஓட்டுநர் இல்லை.






அவ்வாறான எனது பயணத்தில் அண்மையில் நான் சென்று தடம் பதித்த இடம் அனைவருக்கும் தெரிந்த கேமரன் மலை. ஈப்போவிலிருந்து ஏறத்தாழ 2 மணிநேர பயணத்திற்குப் பின்னர் சென்றடைந்தோம். வளைந்துநெளிந்த பாதைகள் மீண்டும் இங்கு வராதே என்ற எண்ணத்தை எனக்குள் உண்டுபண்ணியது.



ஆறேழு வருடங்களுக்கு முன்னர் அங்குச் சென்றிருந்த என்னவளின் கூற்றுக்குப் பயந்து குளிராடைகளை உடன் எடுத்து சென்றிருந்தோம். ஆனால் மதியவேளையில் மழை பெய்துகூட அவ்வளவாகக் குளிரவில்லை. சில கவரும்படியான இடங்களில் கட்டணம் வசூலித்தார்கள். அதில் ஓரிடத்திற்கு இன்னமும் கேட்டிருந்தால்கூட கொடுத்திருக்கலாம். இன்னொரிடத்திற்கு கட்டணம் என்பது அவசியமா என்றிருந்தது. தேயிலைக்குப் புகழ்பெற்ற அவ்விடத்தில் தேநீரின் விலையும் அதிகமாகவே பட்டது. இவை அங்கு என்னைக் குமுறச் செய்தவை. அதேவேளை என்னை நிமிரச் செய்யவும் சில இடங்கள் பங்காற்றின.




ரோசாப்பூத் தோட்டம். ஏறிச்செல்லும்படி உயரமான இடத்தை நோக்கி அமைத்துள்ளார்கள். களிப்பில் களைப்புத் தெரியவில்லை. ஒவ்வொரு பூக்களும் கண்ணாப்பிண்ணாவென்று தழைத்து வளர்ந்திருந்தன. இவ்வளவு பெரிய பூக்களும் உள்ளனவா என்று திகைக்கவில்லை நான். காரணம் உலகிலேயே மிகப்பெரிய பூ (10 கிலோகிராம் எடையுள்ளது) நம் நாட்டில்தான் உள்ளது என்பதில் பெருமைகொள்பவன் நான். அது என்ன பூ என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆயினும் பெரிய பெரிய வித்தியாசமான பூக்களை நேரில் பார்க்கும்போது சற்று திக்குமுக்காடித்தான் போனேன்.







வண்ணத்துப் பூச்சி பூங்காவில் 10 வண்ணத்துப் பூச்சிகள்தான் இருந்திருக்கும் என்றாலும் வேறுசில விந்தையான பூச்சியினங்கள் அவ்விடத்தை அலங்கரித்தன. இலை வடிவிலான பூச்சியினத்தை அங்குதான் கேள்வியுற்றேன். மற்ற பூச்சிகளை விவரிப்பதைவிட நேரில் காண்பதே சுகம். தமிழருக்கு சொந்தமான தேயிலைத்தோட்டம், ஸ்ட்ராபேரிப் பழத்தோட்டம், தங்கும் விடுதிகளைக் காண்கையில் நானும் தமிழனென்ற கர்வம் மேலோங்கியது. உன் பெருமை மேலும் ஓங்குக.



கேமரன் மலை என்பது மலேசியர்களைப் பொருத்தமட்டில் அதுவும் என்னைப் போன்ற வடப்பகுதியைச் சார்ந்தவர்களுக்கு மிகப் பரிட்சியம் பெற்ற ஓரிடமாகும். ஆனால் நான் அண்மையில்தான் முதன்முதலாக அங்கு சென்று வந்தேன். இப்போது நானும் கேமரன் மலை பற்றி அறிவேன் என்று பெருமையாகச் சொல்லி கொள்ளலாம்.


செவ்வாய், 6 ஜூலை, 2010

அஃறிணை - ஒக்காப்பி

0 comments

படத்தில் ஏக்கத்தோடு காணும் இவ்வுயிரை எங்கேனும் கண்டுள்ளீரா? கடந்த இடுகையில் இவரைப் பற்றி சிறிய அறிமுகம் செய்திருந்தேன். இவரின் பெயர் ஒக்காப்பி ( OKAPI ). பெயர் மட்டுமல்ல, இவரின் உருவம்கூட வித்தியாசமாகவே அமையப்பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவின் மத்தியப்பகுதியான கொங்கோ மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர் ஒட்டகச்சிவிங்கி இனத்தைச் சேர்ந்தவராவார். ஆனால் இவரின் கால்கள் பார்ப்பதற்கு வரிக்குதிரையின் கால்கள் போன்று தோற்றமளிக்கும்.


தொலைவில் இருந்து பார்க்கையில் வரிக்குதிரையை நினைவுபடுத்தும் அந்த வரிகளானது ஒக்காப்பியின் குட்டிகள் அதனைப் பின்பற்றி காடுகளில் நடக்க ஏதுவாக இருக்கவும் எதிரிகளிடமிருந்து தற்காத்து மறைந்துகொள்ளவும் துணைபுரிகின்றன. ஒட்டகச்சிவிங்கி போலவே உடலமைப்பைக் கொண்டுள்ள ஒக்காப்பிக்கு கழுத்து மட்டும் குட்டையாக இருக்கும். இதுவும் ஒட்டகச்சிவிங்கி போல நீளமான நீல நிற நாக்கு உடையது. அதுவும் 35 முதல் 46cm வரை வளரும் நாக்கினால் ஒக்காப்பி அதன் கண்களை நக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளும் ; காதுகளையும் கூட. ஆண் இன ஒக்காப்பிகளுக்கு சிறிய கொம்புகளும் உள்ளன.


தாவர உண்ணியான ஒக்காப்பி, இலைத்தழைகள், புற்கள், பழங்கள், மற்றும் மனிதனுக்கு ஒவ்வாத சிலவகை செடிகளையும் தின்னும். சென்ற இடுகையில் குறிப்பிட்டதுபோல ஒக்காப்பியும் கரித்துண்டுகளைத் தின்னுமென அதன் மலத்தைக் கொண்டுச்செய்த ஆய்வில் தெரியவருகிறது. உப்புச்சத்துக்காகவும் தாதுச்சத்துக்காகவும் இவ்வாறு உண்ணும் பழக்கமுடைய ஒக்காப்பி ஆற்றங்கரைகளில் கிடைக்கப்பெறும் ஒருவகை களிமண்ணையும் தின்னும்.

1901 ஆம் ஆண்டுதான் இப்படியொரு உயிரினம் உள்ளதாக ஐரோப்பியர்கள் உணர்ந்துள்ளனர். இன்று உலகளாவிய நிலையில் மொத்தம் நாற்பதே இடங்களில் 160 ஒக்காப்பிகள் மட்டும் காட்சிக்காகவும் பராமரிப்புக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

உலகில் மொத்தம் 10,000- 20,000 ஒக்காப்பிகள் மட்டுமே உள்ளதாக கணித்துள்ளனர். ஒக்காப்பி அழிந்து கொண்டிருக்கும் உயிரினப் பட்டியலில் இல்லையென்றாலும் இயற்கை பேரிடர்களாலும் காட்டை அழிப்பதாலும் அச்சுறுத்தப்படுகின்றன. ஆயினும் 1992 ஆம் ஆண்டு முதல் OKAPI WILDLIFE RESERVE என்ற அமைப்பின் மூலம் ஒக்காப்பி இனத்தை பாதுகாப்பதோடு அதனைச் சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates