செவ்வாய், 8 மார்ச், 2011

தாகம் -2


நீரைப்பற்றிய வியக்கத்தக்கத் தகவல்களைத் தாகம் எனும் தலைப்பில் அலசியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இடையில் இணையத்தில் படித்த சில நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
இன்றையப் பரபரப்பான உலகில் மனிதனுக்கு ஒரு நாளில் 24 மணிநேரம் போதவேயில்லை. இதில் உறங்குவதற்கும் உண்ணுவதற்கும் கூட சிலருக்கு நேரமில்லை. வேலைக்குச் சென்றால் சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கிட்டாமல் போகிறது. இப்படி இயந்திரமாய் திரியும் மனிதப்பிறவிகள் இயற்கையளித்தத் தேகத்தைக் காக்க தவறுகின்றனர். சுவரில்லாமல் சித்திரமேது? அந்தச் சுவற்றைப் பாதுகாக்க வண்ணம் பூசுவது போல நம் தேகத்தைக் காக்க நீர் மிக்க அவசியமாகிறது. ஒய்வுவேளையில் காப்பி குடிப்பதும் வெயில்நேரத்தில் குளிர்பானம் குடிப்பதும் சுயமான, சுத்தமான நீர் பருகுவதற்கு ஒப்பாகாது. நீர் பருகுவதைத் தாகவேளையில் மட்டும் செய்யாது அடிக்கடி பருகுவதை பழக்கமாக்கிக் கொள்ளுதல் வேண்டும். நீர் அருந்துவதன் அவசியத்தை சற்று பார்ப்போம்.

அடிக்கடி நீர் அருந்துவதால் உடல் பருமனைக் குறைக்கமுடியும். காரணம் நீரில் calorie இல்லை. அதிகமாக நீர் அருந்தும்போது calorie மிகுந்த குளிர்பானம் (juice) அல்லது மதுபானம் அருந்தும் ஆவல் தணியும். எனவே, அதிக நீர் அருந்துவதால் (உடலில் calorie குறையும்போது) பசி எடுப்பது போல தோன்றும். ஆனால் அது பசியில்லை; தாகமாகும். நீரில் calorie, கொழுப்புச்சத்து, மாச்சத்து, இனிப்புச்சத்து என்பன கிடையாது. ஆகவே, உடல் பருமனைக் குறைக்க அதிகமான நீரருந்தும் பழக்கம் துணையாகிறது.
நீர் பருகுவதால் இதயம் தொடர்பான நோய்களை விலக்கலாம். 2002இல் American Journal of Epidemiology வெளியிட்ட நான்காண்டுகால ஆய்வின்படி ஒரு நாளைக்கு 5 குவளை நீர் பருகுபவர் 2 குவளை பருகுபவரைவிட 41% மாரடைப்பு காண்பதிலிருந்து தவிர்க்க வாய்ப்புள்ளதாம். இதயம் தொடர்பான நோயிலிருந்து நம்மை காத்துகொள்ள அதிகமான நீரை குடியுங்கள்.
உடலில் நீரூட்டம் குறையும்போது நம் உடல் தெம்பின்றி காணப்படும். நம் உடலின் எடையில் 1-2% நீர் குறைந்தாலும் சத்தி இல்லாத நிலை ஏற்படும். இதனால் சோர்வு, தசை தளர்ச்சி, கிறுகிறுப்பு போன்ற உபாதைகளுக்கு ஆளாகலாம். எனவே நீர் அருந்துவது உடலில் போதிய சத்தியை வழங்கும். உடலில் நீரளவு குறையும்போது தலைவலியும் ஏற்படும். ஒரு சிலருக்கு அல்லது பலருக்குத் தலைவலி வருவது போதைய நீர் அருந்தாத சாதாரணமான காரணத்தினால்தான். சிலவேளைகளில் வேறு காரணமும் இருக்கலாம். தேவைக்கேற்ற நீர் பருகுவதால் தலைவலியிலிருந்தும் விடைபெறலாம்.


நீர் அருந்துவதால் நாம் நமது தோலையும் மெருகேற்றலாம். சரியான நீர் அருந்தும் பழக்கத்தினால் அழகிய ஆரோக்கியமான தோலைப் பெறமுடியும். ஒரேநாளில் இல்லை, ஒருவாரத்திற்கு அதிகமான நீரை அருந்திப் பாருங்களேன்.
உடலில் சரியான அளவு நீரூட்டம் இல்லாமை மலச்சிக்கலுக்கும் காரணமாகிறது. அதிகமாக நீர் பருகுவதால் உடலின் செரிமான அமைப்பு சீர்பெறுகிறது. நார்ச்சத்து மிக்க உணவோடு அதிக நீர் அருந்தும் பழக்கத்தினால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று அமில சிக்கல்கள் களையப்பெறுகின்றன. உடலினுள் புகும் நீரானது வயிற்றிலிருந்தும் மற்ற உடல்பாகங்களிலிருந்தும் நச்சுப்பொருள்களை (toxin) அலசி வெளியேற்றச்செய்கின்றது.
ஆரோக்கியமான அளவு நீர் பருகுவதன் மூலம் செரிமானம் சீர் பெறுவதால் 45% பெருங்குடல் மற்றும் 50% நீர்ப்பை புற்றுநோய் வராமல் தவிர்க்க இயலுமென ஓராய்வு சொல்கிறது. மார்பகப் புற்றுநோயையும் தவிர்க்க இயலும்.


நீர் பருகுவது உடலுக்கு நன்மையைக் கொண்டுவருமென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மேற்குறிப்பிட்ட நன்மைகளைக் கொண்டுவருமென வேறொரு ஆங்கில அகப்பக்கத்தில் படித்துத் தெரிந்து கொண்டதைத்தான் இங்கு பகிர்ந்து கொண்டேன். நீர் அருந்துவது நல்லதைத் தரும் என்றாலும் நாம் அதையொரு அவசியப் பழக்கமாக செயல்படுத்துவது இல்லை. தாகம் எடுத்தால் மட்டுமே நீர் பருகுகிறோம். அது தவறு. நீர் அருந்துவதை தினசரி ஒரு வழக்கமாக்கி கொள்ளுதல் வேண்டும். அதற்கு சில வழிகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்று கேட்டால் பொதுவாக 8 குவளை என்பர். அது தவறான அளவாகும்; காரணம், அந்த அளவில் உணவில் மறைந்துள்ள நீரும் பிற பானங்களும் அடங்கும். அதோடு ஒருவரின் உடல் எடையையும் அவரது உடல் நிலையையும் (நோய் அல்லது உடல்பயிற்சி செய்த பிறகு) பொருத்தே அவரது நீர்த்தேவையின் அளவைக் கணக்கிட முடியும். அது மட்டுமின்றி தாகம் எடுத்தால் மட்டும் நீர் அருந்துவதும் சரியான முறை கிடையாது. எனவே நீர் அருந்த பின்வரும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளலாம். காலை எழும்போது ஒரு குவளை, ஒவ்வொரு உணவின்போதும் ஒரு குவளை, ஒவ்வொரு உணவின் இடைவேளைகளில் ஒரு குவளை மற்றும் உடல்பயிற்சியின்போதும் அதற்கு முன்னரும் கூட அதிகமான நீர் அருந்தவேண்டும்.


நீங்கள் எங்குச் சென்றாலும் ஒரு புட்டியில் நீர் எடுத்துச்செல்லுங்கள். உங்கள் அலுவலக மேசையில் ஒரு குவளை வைத்து கொள்ளுங்கள். நீர் குறையக் குறைய நிரப்பி கொண்டே இருங்கள். உங்கள் கணினியில் அல்லது கைபேசியில் மணிக்கொரு முறை நீர் அருந்த நினைவூட்டல் அமைத்து கொள்ளுங்கள். இதனால் நீர் அருந்த மறக்க மாட்டீர்கள். வெளியில் செல்லும்போது அல்லது விருந்துகளுக்குச் செல்கையில் சுவைபானம் அல்லது மது அருந்தாமல் நீர் அருந்த பழகுங்கள். 
அடிக்கடி உடல்பயிற்சி செய்வதால் உடலுக்கு நீரின் தேவை அதிமாகும். எனவே உடல்பயிற்சி செய்வது உடலை நலம்பெறச்செய்வதோடு நீர் அருந்தவும் துணைபுரிகின்றது.  எங்கு உடல்பயிற்சி செய்யச் சென்றாலும் உடன் நீர் எடுத்துச் செல்லுங்கள். உடல்பயிற்சியின்போது பிற பானம் (isotonic drinks) அருந்தாமல் சுய நீரை மட்டுமே அருந்துங்கள். புதியதாக ஒரு பழக்கத்தை அமல்படுத்தும்போது அதை குறித்து வைப்பதால் அச்செயலை மேலும் துரிதப்படுத்தலாம். எனவே, ஒவ்வொரு தடவை நீர் அருந்துவதையும் எங்காவது சிறிய நோட்டில் குறித்து கொள்ளுங்கள். இப்படி குறித்து வைத்து கொள்வதால் உங்கள் புதிய பழக்கத்தின் மீதான அக்கறை கூடும். அப்பழக்கமும் மேம்படும்.


தூய்மையான நீர் அருந்தி சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்..

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates