வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உலகம் பேணுவோம் -2


புவி வெப்பமடைதல் (Green House), கரியமில தடம் (Carbon Footprint) என்று ஏதேதோ சொல்லி உலகம் அழிவை நோக்கும் ஆபத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்திகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நாம் செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் ஒழுங்குமரியாதையாகக் கடைப்பிடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அழிவை தடுக்க இனி இயலாது என்றாலும் கொஞ்சம் தாமதப்படுத்தப் பல வழிகள் உள்ளன. உதாரணமாக அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு அதிகமான Paperwork இருக்கும். அதன் பெயர் அப்படி உள்ளது என்பதற்காக எடுத்த எடுப்புக்கெல்லாம் தாட்களை விரையப்படுத்தும் வகையில் அச்சு செய்து கொண்டே இருக்கலாமா? இப்போது Paperless முறை வந்துவிட்டாலும் அதிகமானோர் ஒரு பாரத்தையோ அறிக்கையையோ சரிபார்க்க முதலில் அச்சுப்படிவம் செய்வதையே விரும்புகின்றனர். சரி செய்தபின்னர் அதை தூர எறிந்துவிட்டு வேறு அச்சுப்படிவம் செய்வர். இப்படி சின்னத்தாளிலிருந்து (உபயம்: காட்டு மரங்கள்) வானளாவி வரை எதைத் தொட்டாலும் அது விளைவிக்கும் புவிக்கான பாதிப்புகள் நிச்சயம் உண்டு.


சம்சாரம் அது மின்சாரம் என்பார்கள். சம்சாரத்தைத் தொடுவதைப் போல மின்சாரத்தைத் தொட்டால் அது கொஞ்சாது. மிஞ்சிவிடும். சம்சாரமும் சில நேரங்களில் மிஞ்சத்தானே செய்கிறாள். இந்த மின்சாரத்தையும் கட்டுப்பாடுடன் பயன்படுத்துவதால் புவிப்பந்தைச் சற்று காக்க முடியும். அதற்கான சில வழிகளை இந்த இடுகையில் காண்போம்.


கைப்பேசி இல்லாத ஆளே இல்லை எனலாம். அப்படி கையோடு ஆறாவது விரலாக ஒட்டிக்கொண்டிருக்கும் கைப்பேசியின் மின்கலத்தைத் திறனேற்றியப் பிறகு (Charge) அதன் மின்னூட்டியை (Charger) அப்படியே விட்டுவிடுவது அதிகமானோரின் பழக்கமாக இருக்கிறது. என்னதான் நாம் மின்சார விசையை அடைத்திருந்தாலும் அதில் சொருகப்பட்டிருக்கும் மின்னூட்டியில் மின்சத்தி குறைந்த அளவில் பயனீடாகிக்கொண்டுதான் இருக்கும். எனவே, பயன்படாத வேளையில் மின்னூட்டியைக் கழற்றிவிடுவதே நல்லது. இது மடிக்கணினி, படக்கருவி போன்றவற்றின்
 மின்னூட்டிக்கும் பொருந்தும்.

மேலும், மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி உங்களது மின்கருவிகளின் மின்கலத்தைத் திறனேற்ற சூரிய சத்தியைக் கொண்டு செயலாற்றும் மின்னூட்டிகளையும்  (மேலே) பயன்படுத்தலாம். இந்த வகை மின்னூட்டிகள் சாவிக்கொத்து போன்ற வடிவத்திலும் கிடைக்கும். ஆனால், அதிக நேரமெடுக்கும். கைகளால் திருகி சத்தி உருவாக்கும் மின்னூட்டிகளும் உள்ளன. இவை மின்சார வசதி கிடைக்காத வேளையில் மிகவும் துணைபுரியும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக இப்போது வெளிவரும் பெரும்பாலான மின்சாதனங்கள் மின்சத்தியை மிச்சப்படுத்துபவையாகவே உள்ளன. உதாரணமாக Panasonic Inverter எனும் வகையைச் சேர்ந்த குளிர்சாதனப்பெட்டி உள்ளிருக்கும் பொருள்களின் எண்ணிக்கையை அறிந்து சுயமாகவே மின்சத்தியை கட்டுப்படுத்தும். இது போலவே அறையின் சதுர அளவையும் உள்ளிருக்கும் ஆட்களின் எண்ணிக்கையையும் உணர்ந்து மின்சத்தியைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டி சாதனங்களும் உள்ளன. Energy Star எனும் திட்டம் அமெரிக்க அரசால் 1992இல் துவங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது மின்சத்தியை மிச்சப்படுத்தும் உத்திகளைக் கண்டறிந்து அந்நாட்டினருக்குக் கொண்டுச்செல்வதாகும். இத்திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகக் குறைந்த மின்சத்தியில் செயல்படும் சாதனங்களை அங்கீகரித்து அவற்றைப் பற்றிய நன்மைகளையும் பயன்களையும் பரப்புகின்றனர். இத்திட்டமானது இன்று அனைத்துலக நிலையில் செயல்பட்டு வருகின்றது. இதன் சின்னத்தைப் பொறிக்கப்பட்டு வெளிவரும் மின்சாதனங்கள் அதிக அளவில் மின்சத்தியை மிச்சப்படுத்தக்கூடியவையாகும்.எனவே இச்சின்னம் உள்ள மின்சாதனங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.இன்னொரு மின்சாதனமும் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவைகளில் ஒன்றாகியுள்ளது. அது கணினியாகும். முந்தைய நாட்களில் கணினி வாங்குவதும் அதனை செம்மையாகப் பயன்படுத்துவதும் நான் வாய் பிளந்த விடயங்களிலொன்றாகும். ஆனால் இன்று கணினியின் பயன்பாடு எந்தளவுக்குள்ளது என்பது தெரிந்ததே. அப்படி புதிய கணினிகள் வாங்கும்போது பெரும்பாலானவை இயற்கைக்கு அதிக கேடு விளைவிக்காத விதத்தில்தான் வருகின்றன. உதாரணமாக (மடிக்கணினி) மின்கல பயன்பாட்டின்போது சத்தியை மிச்சப்படுத்தும்படியான செயல்முறைக்குத் தானாகவே மாறிக்கொள்ளும். முன்பிருந்த கணினிகள் அதிக சத்தியில் செயல்படுபவையாக இருந்தன. இப்போதையவை அப்படியல்ல. ஆனால் இக்கூற்று கைப்பேசிகளுக்குப் பொருந்தாது. முன்பிருந்த கைப்பேசியைவிட இன்றைய கைப்பேசிகள், அதுவும் Smart Phone போன்றவை சீக்கிரம் திறன் இழந்து மீண்டும் மின்னூட்ட கோருபவை. எனவே, கைப்பேசி விவகாரத்தில் அதிக செயலாற்றுகள் இல்லாதவையே சிறந்தவை.


இதில் இன்னொன்று அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையைக் காப்பதாக எண்ணி Eco Friendly மற்றும் Energy Efficient போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு புதிய மின்சாதனங்களை வாங்குவது போற்றதற்குரியதே. என்றாலும் ஏற்கனவே உபயோகத்திலிருந்த, திக்கித்திணறியாவது செயல்படக்கூடிய மின்சாதனங்களை வீசுவது கேட்டையே விளைவிக்கும். காரணம் அக்கருவிகளிலுள்ள உபரிப்பாகங்கள் சுயமாக அழியக்கூடியவையல்ல. எனவே அவற்றை வசதியற்றவருக்கு தானமாகக் கொடுத்து விடலாம். அப்படி செயலிழந்தவையெனில் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பிவிடலாம்.


மேற்கூறப்பட்டவைத்தவிர மின்சாரத்தை மிச்சப்படுத்தி உலகை காக்க யாருக்கும் தெரியாத சில உத்திகளும் உள்ளன. கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். அவற்றுள் சில உங்களுக்காகச் சொல்கிறேன். ஆளில்லாத அறையில் விளக்கு, மின்விசிறி, வளிச்சீராக்கியை (air conditioner) அடைக்கவும்; கொஞ்சமான துணிகளைச் சலவை இயந்திரத்தில் துவைக்காதீர்; படுத்துகொண்டு தொலைக்காட்சி பார்க்கையில் குறித்த காலமுடுக்கியை (timer) இயக்கிவிடுங்கள்; ஒரு வாரத்திற்கான ஆடைகளை ஒரே நேரத்தில் இஸ்திரி செய்துவிடுங்கள்; அலுவலகக் கணினிகளைப் பயன்படுத்தாத வேளையில் உறங்கச்செய்துவிட்டு (sleep mode) செல்லுங்கள்; இதுவும் தெரியாத பச்ச புள்ளைங்க இங்கே போங்க..

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates