செவ்வாய், 22 ஜூன், 2010

உலகம் பேணுவோம்




உருவாக்கம் கண்ட நாளை கணித்திருக்கிறார்களேயொழிய கண்டவர் கிடையாது. உருவாகிய முறையும் சில/பல ஊகங்களாய் விரிகிறதேத் தவிர உண்மைநிலை இன்னமும் மயக்கமே.
ஆயினும் தொடக்க காலம் முதற்கொண்டே உயிரினம் மட்டும் ஏதோ உருவில் தொடங்கி ஏதேதோ உருவங்களில் இன்று நிரம்பி வழிகின்றது இவ்வுலகில்.

இந்த நிலை மாற்றத்தில் அல்லது முன்னேற்றத்தில் மனிதனாகிய நாம் நம் வசதிக்காகவும் தேவைக்காகவும் இயற்கை அருளியப் படைப்புகளைக் கொண்டும் அறிவியலின் அற்புதத்தை ஒருங்கே இணைத்தும் பல்வேறு பொருள்களை உருவாக்கிப் புழங்குகிறோம்.

இவ்வாறு நாம் புழங்கப் பயன்படும் பொருளும் அதன் கழிவும், மிச்சமும், மீதமும் எங்கேச் சென்று என்னவாகிறது என்பதைப் பற்றி எப்போதுமே அறிந்துகொள்ள எத்தனிப்பதில்லை. ஆனால் அவை கொட்டை மீண்டும் பழமாவது போல நம் வாழ்வைச் சிறக்க வைக்கவோ சீற்றமளிக்கவோ திரும்ப வரும் என்பது மட்டும் உறுதி.

புகழ்பெற்ற உலகம் பேணும் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று அடிக்கடி ‘WHAT YOU DO COUNTS’ என நினைவுறுத்தி எச்சரிக்கை விடுக்கின்றது. அதாவது நாம் நம் தினசரி வாழ்வில் புழங்குகிற பொருளாகட்டும் அல்லது நமது நவீன வாழ்க்கைமுறையாகட்டும். அதனால் நமக்கு விளையப்போகிற விளையத்தொடங்கிவிட்ட இன்னல்களை அவ்வப்போது படம்பிடித்துக் காட்டுகிறது அந்நிறுவனம்.

’நீ ஒருத்தன் மாறிட்டா உலகத்துக்கு நல்லது நடந்திடுமா’ என்கிறாள் என் துணைவி. என்னைப் பார்த்தும் என்னைப் பின்பற்றியும் எவரும் மாறாவிட்டாலும் நான் சரியாக இருக்கிறேன், என் பங்கைச் சரிவர செய்கிறேன் என்ற அகக்களிப்பே எனக்கு போதுமென்கிறேன்.

இப்ப என்னதான் செய்யனும் என்கிறீரா? இது அறிமுகம்தான். போகப்போகச் சொல்கிறேன். ஆயினும் இந்த இடுகையில் நெகிழி என்பதை நுனிப்புல் மேய்வோமே..






“நெகிழி (PLASTIC) என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். பீங்கான், கண்ணாடி போன்ற பொருள்கள் முறுகலான பொருள்கள். அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். இரும்பு (எஃகு), வெள்ளி தங்கம் போன்ற மாழைகளை (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருள்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் (yield) என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக வேதியியல் முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு மூலக்கூறு (சேர்மம்) வடிவை பல்லுருத் தொடராக செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும்.” நன்றி: wikipedia


இது நெகிழிப் பற்றிய அறிவியல் விளக்கம். நமக்கும் இதற்கும் என்னத் தொடர்பு என்பதை நான் சொல்லி நீங்களறிய வேண்டுமா? ஒரு வெள்ளிக்குப் பொருள் வாங்கினால்கூட நெகிழிப்பையில் போடப்பட்டுதான் பெற்றுக்கொள்கிறோம். அவ்வாறாக எளிதில் கிடைக்கக்கூடிய அப்பொருளானது வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட கடல்வாழ் மற்றும் பறவைகளின் உயிர்கொள்ளியாகத் திகழ்கின்றது.



அழிந்துக்கொண்டிருக்கும் உயிரினக் கூட்டத்தில் ஒன்றான இராட்சத கடலாமைகள் இதற்கு முதல்நிலை பலிகடாவாகின்றன. அவைக்கு அதிகச் சத்தளிக்கவல்ல ‘jellyfish’ என்னும் மீனும் நெகிழிப்பைப் போன்றதோர் உருவமே கொண்டுள்ளது. எனவே, கடலாமைகள் மீனென்றெண்ணி வெறும் பையைத் தின்று மடிகின்றன. இராட்சத கடலாமைகள் உண்டு மடியும் கழிவுப்பொருள்களில் நெகிழிப்பை முதலிடம் வகிக்கின்றது.

ஆங்காங்கே வீசப்படும் இத்தகைய உயிர்கொள்ளியான நெகிழிப்பை தானாகவே (காலம்) அதன் நிலையை மாய்த்துகொள்ள ஓராயிரம் ஆண்டுகள் பிடிக்குமாம். பாதிப்பு ஆமைக்குத்தானே என்றெண்ணாதீர்!! ஏதாவதொருவகையில் நமக்கும் பாதிப்புண்டு என்பது உறுதி.



எண் விடும் எச்சரிக்கை :
• வருடத்திற்கு 500 பில்லியன் முதல் 1 திரில்லியன் வரை நெகிழிப்பைகள் புழக்கத்தில் உள்ளன.
• ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1 பில்லியன் பைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுவதாக்க் கணிக்கப்படுகிறது.
• அமெரிக்க நாட்டில் மட்டும் வருடத்திற்கு 100 பில்லியன் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இச்சிக்கலைக் களையும் பொருட்டு உலக நாடுகள் நெகிழிப்பைக்குக் கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளனர். இன்றல்ல, 2002 இல் அயர்லாந்து நாட்டில் ஒரு பைக்கு 20 காசு விதிக்கத் தொடங்கி இன்று 90% நெகிழிப்பை பயன்பாடு குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 90% வணிக நிறுவனங்கள் இத்திட்டத்திற்குச் சம்மதித்துள்ளன. தைவான் நாட்டில் 69% நெகிழிப்பை அல்ல, மாறாக நெகிழியால் உருவாக்கப்படும் பொருள்களின் பயன்பாடு சரிந்துள்ளது.



நம் நாட்டில் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலம் தொடங்கி இப்போது சரவாக் மாநிலத்தில் கூட “ NO PLASTIC BAG DAY “ என்கிற திட்டத்தை அமலாக்கப்படுத்தியுள்ளது. மலேசியா முழுவதுமுள்ள சில நிறுவனங்களின் திரையரங்குகளில் கூட பைகள் தரப்படுவதில்லை. இன்னும் யாமறியாத பல இடங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருவதாக நம்புகிறேன். இத்திட்டமானது குறிப்பிட்ட நாட்களில் அம்மாநிலத்தில் உள்ள, பங்கேற்கும் அங்காடிகளில் வாங்கப்படும் பொருள்களுக்குப் பை கொடுக்கப்படமாட்டாது. மீறி வேண்டுமென்பவர்கள் பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். அதே வேளையில் நெகிழியில் செய்யப்படாத பலமுறை பயன்படுத்தக்கூடிய பைகளும் விற்பனையில் உள்ளன.



நாம் செய்யவேண்டியது இயன்றவரை இந்நெகிழிப்பையின் பயன்பாட்டை முற்றாக இல்லாவிட்டாலும் முடிந்தமட்டில் தவிர்க்கப் பார்ப்போமே. மாற்றத்தின் பயன் இன்றல்ல, நாளை தெரியும். நம்புங்கள்.

2 comments:

PSS SJK(T) LDG CHERSONESE சொன்னது…

வணக்கம். இன்றுதான் தங்களின் வலைப்பதிவைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகிறேன். இயற்கையைக் காதல்கொள்ளும் தங்களின் அன்புள்ளம் என்னை வெகுவாகக் கவர்கிறது. இயற்கை அன்னை வயிற்றில் பிறந்த ஒவ்வொரு குழந்தையுமே அந்தத் தாயின் மடியையே மிதித்து வருகின்றன. எங்கள் போன்ற ‘குழந்தைகளுக்கு’ விழிப்புணர்வு ஊட்டுகின்றது இந்த வலைப்பதிவு. வாழ்க! தொடர்ந்து எழுதுக.

Unknown சொன்னது…

தங்களது கருத்துக்கு நன்றி. என் மனதில் பட்டதை எழுதிப் பிறருக்குப் பயன் இல்லாமல் போவதைவிட ஏதோ நாலு பேருக்கு நல்லதைச் சொல்வோம்னுதான் ஆங்காங்கே உண்மையைக் கண்டறிந்து இங்கு கொஞ்சமாய் வார்க்கிறேன். எழுதியது 2-3 இடுகைதான் என்றாலும் அதில் சொல்லவந்த அனைத்தையும் சொல்ல முடியாமல் போனதில் வருத்தமாகவே உள்ளது. ஆயினும், தங்களைப் போல நாலுபேர் என்னையும் மதித்து எனக்காக 2 நிமிடமொதுக்கி கருத்தெழுதும்போது மனதுக்கு மேலும் உந்துதல் அளிக்கிறது. சில இடுகைகள் இன்னமும் 'ட்ராஃட்' ஆக உள்ளன. நேரம் கிடைத்தாலும் தெளிவுபெற்று எழுத தாமதமாகிறது. விரைவில் அடுத்த இடுகை வரும். கருத்துக்கு மீண்டும் நன்றி.

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates