வெள்ளி, 25 ஜூன், 2010

தாகம்



இன்று காலை எழுந்தவுடன் முதலில் எங்குச் சென்று என்ன செய்தீர்கள் என்று சற்று பின்னோக்கி நிலைவலைகளைச் செலுத்துங்கள்.

சிலர் நேரே கழிப்பறைக்குச் சென்று சற்றுநேரம் ‘நின்றுவிட்டு’ வந்திருப்பீர். சிலர் அங்கே கனத்தைக் குறைத்திருப்பீர். சிலர் மணமிழந்த முத்துப்பெட்டகத்தை நுரைக்கவைத்துத் துப்பியிருப்பீர். சிலர் கட்டழகு மேனியினை நனைத்துகொண்டு வந்திருப்பீர். பலர் அனைத்தையும் வரிசைபடி செய்திருப்பீர்.

அதன்பின்னர் நடந்தவற்றை உங்களிடமே விடுகிறேன். வேறொரு கற்பனை செய்வோமா?

ஒரு காலை வேளை எழுந்தவுடன் நீங்கள் நேரே சென்று திறக்கும்போது அது சுரக்கவில்லை. அண்டை வீட்டாரிடம் கேட்டால், அங்கேயும் அதே நிலை. முதல்நாள் தேக்கிவைத்திருந்ததை அவசரத்திற்குப் பயன்படுத்தலாம் கொஞ்சமாக. அதுவும் முடிந்துவிட்டது. உங்கள் வீட்டில் உள்ள மற்றவருக்கு எதை கொடுப்பீர்?

அதுவும் ஒருநாள் முழுக்க அது சுரக்காவிட்டால் பிழைப்பு நாறிவிடும். அப்படி இருக்க நாம் என்ன செய்கிறோம்? அள்ளி அள்ளி கீழே இரைக்கிறோம் இருக்கும்போது. இல்லாதபோது எதை இரைப்போம்? வீடு தேடி வருவதால் அதனைச் சிந்துகிறோம். நாம் தேடிபோய்க்கொண்டு வந்திருந்தால் அருந்தக்கூட அளவெடுப்போம்.
இது ‘நீரின் பயன்கள்’ என்னும் ஆறாம் வகுப்பு கட்டுரை அல்ல. அதே நீரை பற்றிய அக்கறை.


டைனாசோர் என்ற மிருகங்கள் பருகியபோது இப்பூமிப்பந்தில் இருந்த நீரின் எடை இன்றும் அப்படியேதான் இருக்கிறது. எந்த ஒரு துளி நீரும் எங்கும் மறைந்து போய்விடவில்லை. அதன் பற்றிய (என்னை) வியக்கவைக்கும் செய்திகளைப் பார்ப்போம்.



இரண்டு பங்கு ‘ஹைட்ரோஜ’னுடன் ஒரு பங்கு ‘ஆக்சிஜன்’ சேர்ந்த நிலையை நீராக நாம் பார்க்கிறோம், பயன்படுத்துகிறோம். இப்பூமியில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான பகுதியில் நீர் சூழ்ந்துள்ளது. அதில் 97% உப்புநீர், அதாவது பருக இயலாதது. 2% தூய்மையான நீர் பனிப்பாறைகளாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன. மிஞ்சிய 1% நீர் மட்டுமே உலகம் முழுக்க தினசரி உபயோகத்திற்குப் பயன்படுகிறது.

இந்த 1% நீரில் மூன்றில் இரு பாகம் விவசாயத்திற்கும் பிற உணவுப்பொருள் வளர்ப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள நீரில் நாம் புழங்குகிறோம். வருடத்திற்கு 83 மில்லியன் என்ற எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டு போகும் மக்கள் தொகைக்கு இந்நீர் போதுவதும் போதாமல் போவதும் நாம் நீரைப் பேணுகிற விதத்தில்தான் உள்ளது.



இன்னும் நிறைய விந்தை உள்ளன. உலக மக்களில் 46 சதவீதத்தினருக்கு நேரடி குழாய் நீர் வசதி கிடையாது. வளரும் சில நாடுகளில் நீரை பெறுவதற்கு சராசரியாக ஒரு பெண் 3.7 மைல் தூரம் நடக்கவேண்டியுள்ளது. இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பின் 1.8 பில்லியன் மக்கள் நீர் வசதியில்லாத இடத்தில் வசிப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.




உலக மக்கள் தொகையில் எண்மரில் ஒருவருக்கு தூய்மையான நீர் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 3.3 மில்லியன் மக்கள் நீர் தொடர்புடைய நோய்கண்டு மடிகின்றனர்.

நீர் தொடர்பாக இன்னும் பல எண்ணிக்கை விபரங்கள் நம்பத் தகுந்த ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பெற்று வைத்துள்ளேன். இங்கு அனைத்தையும் இட நான் விரும்பினாலும் என் விரல்கள் கண்ணீர் வடிக்கின்றன.


முந்தைய இடுகையில் நெகிழிப்பையால் மனிதகுலத்திற்கும் பாதிப்பு உண்டென்றேன். அவற்றில் காட்டாக ஒன்று, நெகிழிப்பை தானாக அழிந்துபோக ஆயிரமாண்டுகள் தேவை. அதற்கும் இந்த இடுகைக்கும் என்ன முடிச்சு என்கிறீரா? நான் போடுகிறேன் இப்போது முடிச்சை, அதாவது, தானாக அழிந்துபோக சிரமமுறும் பையை நாம் கண்ட இடங்களில் வீசுகிறோம். “5 காசு திருடினா தப்பா?” என்றெண்ணாமல் உலக மக்கள் வீசும் பையின் எண்ணிக்கையை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள். அப்படி வீசப்படும் பைகள் பூமியில் புதையுண்டு சிக்கிக்கொள்கின்றன. அவ்வாறு புதைந்த பைகளினால் மண்ணில் விழும் மழைத்துளிகள் முறையான நீர்வளப்பகுதிக்குச் செல்ல இயலாமல் ஆங்காங்கே தங்கிவிடுகின்றன. இதனால் மண்ணில் சில படிமங்களைத் தாண்டிச் சென்று இயற்கையாகச் சுத்திகரிக்கப்பட்டு மனித பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் ஊறவேண்டிய நீராதாரங்கள் வற்றிப்போகின்றன. நெகிழிப்பையைத் தவிர்ப்பதால் நீரூற்றுகள் மேலும் செழிக்கும்.


நீரின் அவசியத்தை நீங்களே அறிவீர். மழைநீர் சேமிக்கும் திட்டம் என்பதொன்று இந்திய நாட்டில் உள்ளதென தமிழ்த்திரைப்படங்கள் மூலம் கேள்வியுற்றிருக்கிறேன். நம் நாட்டில் அந்நிலை இல்லை. நமக்கு நீர் வறட்சி எப்போதாவது எங்காவது நிகழும். நமது நாட்டு நீர் விநியோகக் கட்டணத்தை அயல்நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

2009ம் ஆண்டு 100 கேலன் நீருக்கு நியூயார்க்கில் US$0.80, சன் டியாகோவில் US$1.65, பெர்லினில் US$2.52, கோப்பென்ஹேகனில் US$3.43, சிங்கப்பூரில் US$0.61 என விதிக்கப்படிகையில் நம் நாட்டில் US$0.10 மட்டுமே. (ஆதாரம் National Geographic இதழ்)

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். நாளைக் காலை பல் துலக்குகையில் வீணாகக் குழாயை வடியவிடாதீர்.

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates