வியாழன், 22 மார்ச், 2012

மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் நிலை


புதுக்கவிதைக்கு வரலாறும் நிரந்தரமான இடமும் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த இலக்கிய வடிவத்தில் ஒரு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவ்வளவாகக் காணப்படவில்லை. எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் புதுக்கவிதை பெரிய தேக்க நிலையை அடைந்துள்ளது. மலேசியப் பத்திரிகைகள் புதுக்கவிதைக்கு விளைநிலமாக இருந்த போதிலும் புதுக்கவிதையின் தரம், முதிர்ச்சி மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை எனலாம். இத்தகைய தேக்க நிலைக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் பல இருக்கின்றன.

1 போராட்டம் குறைவு


தமிழ்நாட்டின் வறுமை, இலங்கையில் கொழுந்து விட்டெறியும் இனக்கலவரம் இத்தகைய போராட்டச் சூழலில் நமது தற்காலக் கவிஞர்கள் இல்லை. எனவே, பாடுபொருள்களில் திரட்சியான தெளிவான இலக்கு இல்லை. பரவலாக உணரும் விசயங்களே கருக்களாக அமைகின்றன. பெரும்பான்மை காதல் பிதற்றல்களாகவே அமைகின்றன எனும் குற்றச்சாட்டை புதுக்கவிதை எதிர்நோக்கியுள்ளது.2  தமிழறிவு

ஆறு வருடம் மட்டுமே தமிழை முறையாக கற்க வாய்ப்புள்ளது. இடை நிலை, உயர் நிலை பள்ளிகளில் தமிழ் அல்லோலப்படுகிறது. அப்படியே தமிழ் கற்க வாய்ப்பு கிடைத்தாலும், பழந்தமிழ் இலக்கியங்களையும் நம் முன்னோர்களின் இலக்கியங்களையும் சுவைக்க, ஆழ்ந்து அகன்று கற்க நேர ஒதுக்கீடு குறுக்கிடுகிறது. தமிழகத்தில் புதுக்கவிதையில் புகழ்பெற்றவர்கள் யாப்பிலக்கணம், ஆழ்ந்த, அகன்ற தமிழறிவு கொண்டவர்கள். மெத்தப் படித்தவர்களும் அதிகம். இங்கே இவ்விரண்டு சிறப்புகளுமே நம் கவிஞர்களிடம் குறைவு. இதற்கு அரசியல் போக்கும் கல்விக் கொள்கையும் காரணமாக உள்ளன.


 
3  நினைத்தவுடன் கவிதை - முறையான பயிற்சி இல்லாமை


எழுத வரும் முன், தொடர்ந்த வாசிப்பு தீவிர இலக்கியப் பயிற்சி போன்ற முயற்சிகளால் கவிதைகளைச் செதுக்கி செப்பனிட வேண்டும். இவ்வாறு அல்லாமல், நினைத்த மாத்திரத்தில் உள்ளத்தில் தோன்றுவதை எழுதுவதால் கவிதையின் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
 

4  சுயத் தேடல் குறைவு


வாசிக்கின்ற பழக்கம் அற்று வரும் இக்காலகட்டத்தில் கவிதை சார்ந்த சுய தேடல் கவிதையாளர்களிடம் மிக அபூர்வமாக உள்ளது. ஆகையால், இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப நாம் நம்மை வளர்த்து கொள்ள தேடல் மிக அவசியம். பொருளாதாரத் தேடலில் மூழ்கிப் போகும் இவர்களால் கவிதை பரிணாம வளர்ச்சியில் பயணிக்க முடிவதில்லை. இயந்திர வாழ்க்கையில் இலக்கிய நெகிழ்வில்லாமல் இறுகிவிட்டிருக்கிறது.


5  தனிமனித உணர்வுகள்

 மேலும் இவ்வகை நவீன கவிதைகளில் தனிமனித அந்தரங்க உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. சொந்த மன அரிப்புகளைச் சொறிந்து விடக்கூடிய கவிதைகளாகவே இந்த நவீன கவிதைகள் உள்ளனவோ எனத் தோன்றும் அளவிற்கு இவ்வகை கவிதைகள் பெரும்பான்மை அகவயப்பட்டவையாக உள்ளன. இத்தகைய கவிதைகளில் சமூகப் பார்வை அவ்வளவாகக் காட்டப்படவில்லை எனலாம். நவீன கவிதை முற்றிலும் உரையாடலை நோக்கி நகர்வதாகவும் கவித்துவம் அதில் குறைவாக உள்ளதாகவும் மூத்த புதுக்கவிதையாளர்களில் ஒருவரான கோ. முனியாண்டி அவர்கள் "காதல்"   இதழ் நேர்காணலின் போது தமது பார்வையில் பட்டதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கவிதைத் துறையில் ஏற்படும் இத்தகைய பரிணாம வளர்ச்சியைப் புதிய இலக்கிய வரவாக எண்ணி, ஏற்று புதுக்கவிதைக்கு அணி சேர்க்கலாம்.
  
முடிவுரை
 
புதுக்கவிதைத் தீப்பந்தத்தைக் கையில் ஏந்திக் கொள்ள புது வாரிசுகள் தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ள தயார் செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து வாசிப்பு, தீவிர இலக்கியப் பயிற்சி, நவீன இலக்கியத்தில் அதிக ஈடுபாடு, கடந்த கால வரலாறுகளை நோக்கும் இலக்கியப் பார்வைகள், நமது வேர்களைத் தெரிந்து கொள்ளும் மனப்பான்மை ஆகியவை ஒருவனைச் சிறந்த இலக்கியவாதியாக ஆக்கும்.

கருத்தரங்குகளின் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும். இடைநிலை, உயர்நிலைக் கல்விக் கூடங்களில் பயிலும் இளைய சமுதாயம் புதுக்கவிதை தொடர்பான இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள முன்வர வேண்டும். புதிய நோக்கோடு,  புதுச் சுவையோடு பல தரப்பட்ட விரிவான பாடுபொருள்களோடு கூற வேண்டும் என்னும் சிந்தனையை மனதில் கொண்டு, நம் 'வலியை', நம் 'மண்ணின் மணத்தைச்' சொல்லும் கவிதைகள் இங்கே படைக்கப்பட வேண்டும். இவ்வாறு நம் கவிஞர்கள் செயல்பட்டால், புதுக்கவிதை நம் நாட்டில் வளமுடன் வரலாறு படைக்கும் என்பது உறுதி.


படைப்பு:  திருமதி இராஜம் இராஜேந்திரன்
நன்றி : மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates