திங்கள், 28 ஜூன், 2010

அஃறிணை - போங்கோ



இந்த இடுகையில் நம்மை அல்லது நம்மில் சிலரை அதிசயமூட்டும் உயிரினங்களைப் பற்றி என்னால் கண்டறிய முடிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடலிலும் காட்டிலும் மனிதன் கால் பதித்தப் பகுதியை விட பதிக்காதப் பகுதிகளே அதிகம். ஆனால் இன்றைய நாட்களில் மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் என்று பாடுவதைவிட மனிதன் எல்லாம் தெரிந்துகொள்ள எத்தனிக்கிறான் என்பது மகிழ்ச்சியான விடயம். இதற்கு காரணம் அந்த தெளிவு வரும் நாட்களில் மனிதகுலத்துக்கு நன்மை பயக்கும் என்பதே.



அப்படி மனிதன் தேடுகையில் அநேகமான அதிசயங்களையும் இயற்கையின் அற்புதங்களையும் கண்டு வியந்து பிறரையும் வியக்கச் செய்கிறான். இன்னமும் செய்வான். அவன் கண்டு சொன்னதை இந்த மனிதன் உங்களுக்குச் சொல்கிறேன்.







முதல் வியப்பாக மாடு போன்றத் தோற்றமளிக்கும் ஒருவகை உயிரினத்தைப் பார்ப்போம். அஃறிணைகளை விலங்கு அல்லது பிராணி என்றழைப்பதைவிட உயிரினங்கள் என்றழைக்கவே விரும்புகிறேன். காரணம் இன்றைய சூழலில் எதுவெல்லாம் பிராணி, விலங்கு என்னும் குழுவில் சேருமென ஐயமாகவுள்ளது. சரி கதைக்கு வரும்.






படத்தில் உள்ள உயிரினத்தின் பெயர் போங்கோ ( BONGO ). இதன் அறிவியல் பெயர் TRAGELAPHUS EURYCERUS. ஆப்பிரிக்காவில் கெண்யா மலைப்பகுதிகளில் வாழும் இந்த உயிரினம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று தாழ்நிலங்களில் வசிப்பன ( western bongo ) மற்றொன்று உயர்நிலங்களில் அதாவது மலைப்பகுதிகளில் வசிப்பன ( eastern bongo ). இவற்றின் மேனி சிவந்த பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற வரிகளுடன் உள்ளன. அதுவும் ஆண் போங்கோவின் நிறம் அதன் வயது கூடும்போது மேலும் கருமையாகுமாம். பெண் இன ( கோழிக்கு சேவல்-பெட்டை, மாட்டுக்குப் பசு-காளை என்றிருக்க இதற்கு என்னவாக இருக்கும்?) போங்கோவின் நிறமோ வெளுமையாகவே இருக்குமாம். இதன் தோலில் உள்ள வெள்ளைநிற வரிகள் அதனை எதிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏதுவாக உள்ளன.




இதற்கு ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நீண்ட தடித்த சுருளானக் கொம்புகள் உள்ளன. ஆயினும் பெண் இன போங்கோவிற்கு சற்று மெல்லியதாகவே கொம்புகள் அமைந்துள்ளன. இதில் வியக்கத்தக்கது என்னவெனில் ஆண் இன போங்கோவின் கொம்புகள் 75-99 cm வரை வளருமாம். கிட்டதட்ட 1 மீட்டராகும். போங்கோவின் சினை காலம் 285 நாட்களாகும். அதாவது மனிதனைப் போலவே 9 ½ மாதங்கள்.



இஃது ஒரு தாவர உண்ணி என்பதால் இலைத்தழைகள், செடிக்கொடிகள், புற்கள், வேர், தானியங்கள் மற்றும் பழங்களை விரும்பி உண்ணும். இதற்கு இன்னொரு பொருளையும் உண்ணும் பழக்கமுண்டு. இடிவிழுந்து எரிந்துபோன மரங்களின் கரித்துண்டையும் இஃது உண்ணுமாம். அதன் உடலில் உப்புச்சத்து வேண்டுமென்பதால் இவ்வாறு செய்கின்றன. இப்பழக்கம் இன்னொரு விலங்குக்கும் உண்டு. அந்த இன்னொரு விலங்கு எதுவென்று அடுத்த இடுகையில் சொல்கிறேன். அந்த இன்னொரு விலங்குக்கும் போங்கோவுக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. இரண்டுக்கும் மிக நீளமான நாக்கு உள்ளது. அந்த இன்னொரு விலங்கை இப்போதைக்குப் படத்தில் காண்க.



முதிர்ச்சியடைந்த ஒரு போங்கோ 3 முதல் 4 அடி உயரமும் 5 முதல் 8 அடி நீளமும் கொண்டிருக்கும். ஒரு பெண் போங்கோ 210-235 கிலோகிராம் எடை பெறுமளவுக்கு வளரும். ஆண் போங்கோ 240- 405 கிலோகிராம் வரை எடை பெறும்.

கெண்யாவில் மலைசார்ந்தப் பகுதிகளில் வாழும் இந்த விலங்கினத்தின் இன்றைய மொத்த எண்ணிக்கை மிகச்சரியாகத் தெரியாவிட்டாலும் ஏறத்தாழ 28,000 இருக்குமென கணித்துள்ளனர். அதிலும் அதன் கொம்புக்காகவும் இறைச்சிக்காகவும் மனிதர்களாலும் சிங்கம் சிறுத்தைப்போன்ற பிற கொடிய விலங்கினாலும் வேட்டையாடப்படுவதால் இதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது. போங்கோ வாழும் பகுதிகளில் வாழும் உள்ளூர் மக்கள் இவ்விலங்கைத் தொட்டாலோ உண்டாலோ அவர்களுக்கு SPASMS எனும் நோய் வருமென நம்புவதால் அதனைத் தொந்தரவு செய்வதில்லை. ஆயினும் போங்கோவின் எண்ணிக்கை கொம்புக்காக வேட்டையாடும் நடவடிக்கையால் எதிர்வரும் காலங்களில் குறையுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. எதைத்தான் விட்டு வைத்தான் இந்த கட்டையில் போகிறவன்.

2 comments:

வலைப்பதிவாளர் சொன்னது…

வணக்கம் ஐயா. அருமையான பதிவு. இது போன்ற பதிவுகள் தமிழில் மிகச் குறைவாகவே காணப்படுகின்றன. அக் குறையைத் தீர்க்கும் வண்ணமாக தங்களின் பணி அமைகிறது. வாழ்துகிறேன் ஐயா!

//எதுவெல்லாம் பிராணி, விலங்கு என்னும் குழுவில் சேருமென ஐயமாகவுள்ளது//

ஐயா பிராணி என்பது வடமொழிச் சொல். அதன் பொருள் உயிர் என்பதே. ‘என் பிராணத்த்தை வாங்கதே’ என்பது சிலரின் பேச்சு வழக்கில் கண்டீர்ப்பீர்கள். தமிழில் ’உயிரி’ எனும் சொல் விலங்கை குறிக்கவுள்ளது. விலங்கு எனும் சொல் வளைவுக் கருத்தில் அமைந்தச் சொல். விலங்கு மனிதன் போல் நிமிர்ந்த வாட்டத்தில் அல்லாமல் படுக்கை வாட்டத்தில் உள்ளமையால் அக் கருத்தில் அச் சொல் அமைந்துள்ளது. உயிரி, விலங்கு, மிருகம் என நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். பொருள் ஒன்றே ஐயா. நன்றி.

Unknown சொன்னது…

தங்களது கருத்துகளுக்கு நன்றி.

விலங்கு பற்றிய விளக்கம் உண்மையில் எனக்கு புதிய தெளிவை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கருத்துகள் என்னை மேலும் எழுத உற்சாகப்படுத்துகின்றன. கருத்துகள் தொடர்க.

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates