புதன், 18 ஆகஸ்ட், 2010

ஆறுவது சினம்


ரொம்ப நாளா எழுதாம ஆறி போச்சு என் வலைப்பதிவு. அதை கொஞ்சம் குளிப்பாட்டி, தலை சீவி, சடை பின்னி, உட்கார வச்சு புலம்பறதுக்கு இப்பதான் காலம் கனிந்தது. ஆத்திரத்தால எதையும் சாதிக்கமுடியாது என்று எல்லா மாணவர்களுக்கும் பாடம் கற்பிக்கிறேன்; அடுத்த மனிதன் மேல அன்பு பாரட்டனும் என்றும் போகிற இடமெல்லாம் சொல்கிறேன். போய் சேர்ந்த என் அம்மா அப்பா வயசுல எந்தவொரு பழுத்த பழம் சாலையோரம் நொந்துகிடந்தாலும் என் கண் கலங்கி போகிறது. அப்படிபட்ட நல்ல மனதும் மனிதநேயமும் எனக்குள் இருப்பதாக நானே நினைத்துகொள்கிறேன். ஆனால் நான் அவன் இல்லை என்றும் பல நேரங்களில் சங்கடப்படத் தோன்றுகிறது. எனவே நான் நல்லவனா கெட்டவனா என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை மிருகம் பாதி கடவுள் பாதி (சொல்லவரும்போதே மிருகம்தான் தவறுதலாக முன் வருகிறது) என்று இருக்குமென மனம் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் மிருகம்தான் முக்கால்வாசி இருக்கும் என்று அசரீரி சொல்கிறது. சரி நான் எப்படியோ இருந்துட்டு போகிறேன், ஆனால், நூறு பேருக்குப் பாடம் சொல்லிக்கொடுக்குற நான் அப்படி இருக்கலாமா?

-அப்படி என்னதான்டா பண்ணே??-

ஒன்றும் இல்லை, எல்லாம் இந்தப் பாழாய் போன கோபம்தான். இதுவரை அந்த உலக மகா மட்டமான உணர்ச்சி ஏற்படும்போது நானெடுத்த எந்த முடிவும் சரியாக இல்லை. கையிலுள்ளது உடையும், பறக்கும் அல்லது கிழியும். மனோவியல் பற்றி படித்தபோது அச்செயல்கள் கோப உணர்ச்சியிலிருந்து வெளியேறிவர உதவுமென ஆசான் சொன்னார். பழையக் காகிதங்கள், பழையப் பொருட்கள் அல்லது போகிக்கு எடுத்துவைத்த பொருள் மீது அவ்வுணர்ச்சியைக் காட்டினால் ஏற்றுக்கொள்ளலாம். நான் உடைத்ததும் கிழித்ததும் பறக்கச்செய்ததும் நல்ல நிலையில் இருந்தவை; என் செயலுக்கு பின் நொந்தநிலையில் இருப்பவை.

 இப்படி என் கோபத்தின் பலனை  இங்கே போட்டுடைத்து என்னை நானே கேவலப்படுத்திக்கொள்வது என் நோக்கமல்ல. ஆனால் என் கோபம் எதையெல்லாம் சாதித்துள்ளது என்று எடைபோட்டுப் பார்க்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் இந்த இடுகையைத் தூண்டிவிட்டதே. எனக்கு சிலரிடம் மட்டும் பல காரணங்களால் கோபம் கொந்தளிக்கும். ஆனால் அதை வெளிப்படுத்தி உரியவரிடம் கடிந்துகொள்ளும் அளவுக்கு எனது நிலை இல்லை. ஆனால் அவ்வுணர்ச்சி அடங்கிப்போகாது.  அன்று ஒரு நிகழ்வின் தாக்கத்தால் கோபம் மட்டுமே என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. எனக்குள் எவனோ ஒருவன் (நான்தான் வேற யாரு) புகுந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல், உயிரையும் மதிக்காமல் மோட்டார் சைக்கிளில் பறக்கிறான் வீட்டை நோக்கி. வீட்டில் இருக்கும் முதலாளி அம்மா என்னைக் கைப்பேசியில் அழைக்கிறாள். நானும் பதிலளிக்கிறேன். அவளின் குரலைக் கேட்கும்போது எனது கோபம் தணிகிறது. வண்டியின் வேகமும் லேசாகக் குறைகிறது. இருந்தாலும் மனதில் இருந்த நெருடல் இன்னும் மங்கவில்லை.

அப்போது பின்னால் வரும் மகிழுந்துவொன்று என்னை முந்திச்செல்ல எத்தனிக்கிறது. இரண்டு சக்கர ஊர்தியில் செல்லும் நானோ சாலையையே வளைத்துப் போட்டுகொண்டு மத்தியில் செல்கிறேன். அவ்வண்டிக்காரன் ஹார்ன் அழுத்துகிறான்.பிறகு முந்துகிறான். நானோ அங்கெல்லாம் பாதையே இல்லாத மாதிரிதான் நடிப்பானுங்க என்று எங்கோவுள்ள கோபத்தை அவனிடம் காட்டி, முனகிக்கொண்டே முறைக்கிறேன். வண்டி முந்துகிறது. வண்டியிலுள்ள மூன்று மலாய்க்கார இளைஞர்களும் என்னைப் பார்க்கின்றனர். முந்திவிட்டனர். பிறகு அவ்வண்டியின் வேகம் குறைகிறது. வெட்டிட்டா போகவேண்டிதானே, லூசு மாதிரி slow பண்றானுங்க பாரு, அடுத்த முனகல். மெதுவாகப் போய்க்கொண்டிருக்கும் அந்த வண்டியிலிருந்து ஒருவன் எட்டிப்பார்த்து என்னிடம் ஏதோ கைச்சாடை காட்டுகிறான். பிறகு அந்த வண்டி பறந்துவிட்டது. என்னவாக இருக்குமென்று நானும் திரும்பித்திரும்பி ஊர்தியைப் பார்க்கிறேன். எல்லாம் சரியாக இருந்தது. ஒருவேளை நாம் முறைத்ததால் நம்மை குழப்பிவிட அப்படி செய்தார்களோ என்று என் மரமண்டை சொன்னது. ஊர்தியை நிறுத்திவிட்டு குனிந்து நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது; எனது குளிராடையின் கைப்பகுதி இரும்புக்கூடையிலிருந்து கீழே தொங்கிக்கொண்டே, சாலை முகப்பை உரசிக்கொண்டே  வந்திருக்கிறது. கோபத்தில் நான் பறந்தபோது அதுவும் பறந்து அப்படி ஆகியிருந்தது. கவனிக்காமல் மேலும் சென்றிருந்தால் அது சக்கரத்தில் மாட்டிகொண்டு என்னையும் எங்காவது தொங்கச்செய்திருக்கும். அதை சுதாகரித்துகொண்டு நிமிரும் வேளையில் எனக்கு உதவியவர்கள் அங்கில்லை.

-இந்த சின்ன சம்பவத்துக்கா இவ்ளோ உணர்ச்சி பொங்குற?-

இது எனக்கு சின்ன சம்பவமாகத் தோன்றவில்லை. அந்த இளைஞர்கள் காலத்தினாற் செய்தி நன்றி எனக்கு மாணப் பெரிதுதான். அன்றிரவு முழுக்க அந்த சம்பவம் என்னை பிரட்டி போட்டுகொண்டு இருந்தது. சில நேரங்களில் நம் சொந்த உணர்வுக்காக, நம்மிடம் உள்ள குறைபாடுகளுக்காக நியாயமே இல்லாமல் பிறரிடம் கடிந்து கொள்வது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்று உணர்கிறேன். எங்கோ உள்ள கோபத்தை அறவே தொடர்பில்லாத ஒரு பொருளாகட்டும், உயிராகட்டும், அங்கு காட்டி என்ன பயன்? நான் ஞானியோ, சாமியாரோ இல்லை. ஆனால் ஆறறிவு பெற்றவொரு மனிதனாகவேயிருந்து சிந்தித்துப்பார்க்கிறேன். ஆத்திரத்தைப் பற்றி ஆத்திசூடி தொடங்கி அன்பே சிவம் படம் வரைக்கும் எல்லாரும் சொன்னது சத்தியமாக உண்மை. ஆத்திரப்படும்போது அறிவிழக்கிறோம். அதற்குபிறகு எதையெதையோ இழக்கிறோம். ஆத்திரமென்பது சாதாரண உணர்ச்சிதான். அது எல்லாருக்குமே வரக்கூடியதுதான். ஆனால் அதன் விளைவு சதா ரணமாகிவிடக்கூடாது. எனவே அந்த உணர்வைத் தவிர்க்க இயன்றவரை நான் முயல்கின்றேன். என்கூட நீங்களும் வாங்களேன்..
மரமண்டை

1 comments:

மதுரை சரவணன் சொன்னது…

// ஆத்திரமென்பது சாதாரண உணர்ச்சிதான். அது எல்லாருக்குமே வரக்கூடியதுதான். ஆனால் அதன் விளைவு சதா ரணமாகிவிடக்கூடாது. எனவே அந்த உணர்வைத் தவிர்க்க இன்றவரை நான் முயல்கின்றேன். என்கூட நீங்களும் வாங்களேன்.. //

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates